பீளமேட்டில் பீகார் வாக்காளர்! கோயம்பேட்டில் கோவாகாரர்! SIRஆல் நீக்கப்படும் தமிழர்கள்? எதிர்ப்பு ஏன்?
சென்னை: பீகாரை போல தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் குடியுரிமை ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது வாக்காளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலானோரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட குடியுரிமை ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் வடமாநிலங்களில் இருந்து இங்கு புலம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்கள் அந்த ஆவணங்களை வைத்திருப்பதால் அவர்கள் தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்படலாம் எனவும், இது வரும் காலங்களில் தேர்தல்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அச்சம் தெரிவிக்கின்றன அரசியல் கட்சிகள்.
தமிழகத்தில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (Special Intensive Revision - SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கவுள்ளது. இந்த திருத்தத்தின் நோக்கம், வாக்காளர் பட்டியலில் உண்மையான இந்திய குடிமக்கள் மட்டுமே இடம் பெறுவதை உறுதி செய்வது தான் எனக் கூறப்படுகிறது.
இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் அதன் மூலம் நியமிக்கப்படும் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்து, தேவையான ஆவணங்களைப் பெற உள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றது.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் ஒரே நபர் இரண்டு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருந்தால் அதை நீக்குவது, இறந்தவர்களின் பெயரை அகற்றுவது, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பட்டியலில் இருந்தால் அவர்களின் பெயரை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தத்தில், வாக்காளர் பட்டியலை முழுமையாக சுத்தம் செய்யும் பணிதான் இது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
சிறப்பு தீவிர திருத்தம்
தமிழகத்தில் இந்த பணிகள் நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று, குடியிருப்பவர்களின் விவரங்களை சரிபார்ப்பார்கள். ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை. அவர்கள் அதிகாரிகளால் வழங்கப்படும் படிவங்களை நிரப்பினால் போதுமானது. ஆனால் புதிய வாக்காளர்கள் சேர விரும்பினால், ஆவணங்களை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
ஆதார் அட்டை
இங்கு ஒரு முக்கிய விஷயம் உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆவணங்களாக ஆதார் அட்டை மட்டும் போதாது. ஆதார் அட்டை அடையாளத்திற்கான சான்று மட்டுமே, ஆனால் அதனை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்கப்படாது என்கிறது தேர்தல் ஆணையம். குடியுரிமைச் சான்றுகளாக பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை அவசியம் வேண்டும். அதேசமயம், ரேஷன் கார்டு, பான் கார்டு, நூறு நாள் வேலைத் திட்ட அட்டை போன்றவை தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்படாது.
குடியுரிமை சான்று
இந்த திருத்தப்பணி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு டிசம்பர் 9ஆம் தேதி புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் சேர்க்கப்படவில்லையா, அல்லது தவறாக உள்ளதா என சரிபார்த்து, திருத்தம் கோரலாம். இதற்கான கால அவகாசம் ஜனவரி 8ஆம் தேதி வரை இருக்கும். பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வர காரணம், இதே மாதிரியான திருத்தம் பீகார் மாநிலத்தில் நடந்தபோது பெரும் சர்ச்சை எழுந்தது தான்.
பீகார் அனுபவம்
பலரிடம் தேவையான ஆவணங்கள் இல்லாததால் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை மீது கடும் எதிர்ப்பும் எழுந்தது. இதனால், தமிழகத்தில் இதே நிலை ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறது. காரணம், தமிழகத்தின் பல ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் பிறப்புச் சான்றிதழ் அல்லது குடியுரிமைச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் பலரிடம் இல்லை. இதனால் பல உள்ளூர் வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள்
அதே நேரத்தில், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் குடியேறி வாழும் பலர், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளராகப் பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் நிலை உருவாகலாம். இது எதிர்கால தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சிகள் கவலை தெரிவித்து வருகின்றன. இதனால் தான், திமுக தலைமையிலான தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறது.
வாக்காளர் அச்சம்
வாக்காளர் உரிமை என்பது ஒரு குடிமகனின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதால், யாரிடமும் அந்த உரிமை பறிக்கப்படக் கூடாது. அதேசமயம், சட்டவிரோதமான பெயர்கள் பட்டியலில் சேராமல் பார்த்துக்கொள்ளவும் முக்கியம். இந்த இரண்டிற்குமான சமநிலையை காக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தான் முன் வைக்கப்படுகிறது. மொத்தத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை, தேர்தல் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இருந்தாலும், அதனால் தமிழக வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை.












Click it and Unblock the Notifications