தமிழ்நாடு டூ இலங்கை! கடலுக்கு அடியில் சுரங்கப் பாதை அமைத்து சாலை போடணும்! திமுக எம்.பி. புது யோசனை!
சென்னை: தமிழ்நாட்டையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப் பாதை அமைத்து சாலை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சுரங்கப்பாதை மட்டும் அமைக்கப்பட்டால், உலகிலேயே இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது சுரங்கப் பாதையாக இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கடலுக்கு அடியில் முதல் சுரங்கப்பாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கலாநிதி வீராசாமி எம்.பி. பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது
பிரதமர் மோடியின் கடிசக்தி தேசிய பிரதான திட்டத்தின் குறிக்கோள் இந்தியாவில் வேகமான வளர்ச்சியை உத்வேகப் படுத்துவதாகும். இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப் பாதையை அமைத்து, அதில் சாலை மூலம் இணைக்க வேண்டும்.
இந்த சுரங்கப்பாதை, கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென்பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். கடலுக்கடியில் அமைக்கப்படுவதால், கடல் வாழ் தாவரங்கள் மற்றும் கடல் அமைப்புக்கு, குந்தகம் இல்லாமல், எந்தவித மாசும் ஏற்படாத வகையில் அமைக்க முடியும்.
தமிழ்நாட்டையும், இலங்கையையும் இணைக்க ஆடம்ஸ் பிரிட்ஜ்க்கு கீழே சுரங்கப்பாதையாக அமைய உள்ள இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இந்தியாவையும், இலங்கையையும், சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும். இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் பெரும் பயனடைவர். இந்த சுரங்கப் பாதையின் மூலம் மக்கள் பிரயாணமும், பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் அதிகரிக்கும்.
தொழில்துறை வளர்ச்சியும், பணப்பரிமாற்றமும் அதிகரிக்கும். இலங்கை தன்னுடைய தேயிலை, ரெடிமேட் ஆடைகள் போன்ற பொருட்களை சந்தைப் படுத்துவதற்கும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை சீரடைய வாய்ப்பு ஏற்பட்டு. அந்நாடு வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க உதவும்.
இந்தச் சுரங்கப்பாதை முதலில் சாலை மார்க்கமாக இந்தியாவையும், இலங்கையும் இணைத்தாலும், பின்னாளில், இதே சுரங்கப் பாதை மூலம் இரயில் இணைப்பு ஏற்படுத்தவும், பைப் வழியாக இணைப்பு ஏற்படுத்தவும், மின்சாரம் மற்றும் கேபிள் மூலம் இணைப்புகள் உண்டாக்கவும் பயன்படக்கூடும்.

இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கடலுக்கு அடியில் முதல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதை அடுத்து, உலகிலேயே இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது சுரங்கப் பாதையாக அமையும்.
இந்தியா மற்றும் இலங்கையை சாலை மார்க்கமாக இணைக்க வல்ல சுரங்கப்பாதை திட்டத்தை விரைவில் துவங்கிட ஆணையிடும்படி பிரதமரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேறும் வகையில் தங்களின் பதிலை எதிர்பார்க்கின்றேன் என்று டாக்டர் கலாநிதி வீராசாமி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications