சொந்தமாக கார் இருக்கா? இதை படிங்க முதல்ல.. லோக்சபா தேர்தலால் போக்குவரத்து ஆணையர் ‛வார்னிங்’
சென்னை: லோக்சபா தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தான் சொந்தமாக கார் வைத்திருப்போருக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் முக்கிய எச்சரிக்கையை வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து சென்றால் கண்டிப்பாக ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படும்.
இந்நிலையில் தான் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‛‛ லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் சொந்த போர்டு வாகனங்களை பலரும் தேர்தல் பணிக்காக வாடகைக்கு வழங்கி வருவதாக பல புகார்கள் வந்துள்ளன.
இப்படி செய்வது என்பது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை மீறுவதாகும். அதோடு மாநில அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் சட்டம் மற்றும் விதிகளை 100 சதவீதம் வரை பின்பற்றுவது கட்டாயம். இதனை அனைத்து மண்டல அலுவலர்கள், ஆர்டிஓக்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே சொந்த கார்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்துவது தவறு. இந்த விதிமீறல் என்பது சாதாரண நாட்களில் ஆங்காங்கே நடக்கும். ஆனால் இப்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் சொந்த கார்களை வாடகைக்கு விட தொடங்கி உள்ளதாக புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆணையர் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications