வாழ்க தமிழ்நாடு! தமிழ் உணர்வுடன் தமிழர்கள் இல்லங்களில் கோலங்கள்! தை முதல் நாள் உற்சாகம்!
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையான இன்று தமிழ்நாடு வாழ்க என வண்ணக் கோலமிட்டு தங்கள் தமிழ் உணர்வை தமிழர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தை முதல் நாளை தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு வரவேற்போம் என மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பலரும் அதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு மீதான தங்கள் பற்றை உணர்த்தியுள்ளார்கள்.
தமிழகம் -தமிழ்நாடு என வார்த்தைப் போர் நடைபெற்று வரும் சூழலில் தமிழ்நாடு வாழ்க என்ற கோலம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பொங்கல் வாழ்த்து
செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று விடுத்திருந்த வாழ்த்து மடலில், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் 'தமிழ்நாடு வாழ்க' எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்கும் விதமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் தமிழ்நாடு வாழ்க, வாழ்க தமிழ்நாடு என்ற வாசகங்களுடன் கூடிய வண்ணக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வாழ்க
இதன் மூலம் தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் மீதும் தாங்கள் வைத்துள்ள பற்றை தமிழர்கள் உணர்த்தியுள்ளார்கள். தமிழகம் என்று அழைப்பதா, தமிழ்நாடு என அழைப்பதா என விவாதங்களும், வார்த்தைப் போர்களும் நடைபெற்றும் வரும் இச்சூழலில் தமிழ்நாடு வாழ்க என தமிழர்கள் இல்லங்களில் கோலமிடப்பட்டிருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பெரியார் -திருவள்ளுவர்
இதனிடையே தமிழ்நாடு வரைப்படத்தை கோலமாக போட்டுள்ள பெண் ஒருவர், அதில் ஜல்லிக்கட்டு காளை, பெரியார், திருவள்ளுவர், உழவர், பொங்கல் பானை, என பலவற்றையும் சேர்த்து தமிழ்நாடு என்ற வார்த்தையையும் வண்ணக் கோலங்களால் வரைந்து அசத்தியுள்ளார். இதேபோல் பல இடங்களிலும் தமிழ்நாட்டையும், தமிழையும் உயர்த்திப் பிடித்து கோலமிட்டு தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

தமிழர்கள் அனைவரும்
பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் தமிழர் திருநாள் என்பதால் அனைத்து மதத்தினரும் தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்த 3 நாட்களும் தமிழக திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications