பகலில் பட்டையை கிளப்பும் வெயில் அதிகாலையில் பனிமூட்டம் - வறண்ட வானிலை
இன்று முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: இன்று முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தை மாதம் தரை எல்லாம் குளிரும் மாசி மாதம் மச்சு எல்லாம் குளிரும் என்று கிராமத்து பக்கம் சொலவடை சொல்வார்கள். அதிகாலையிலும் இரவு நேரங்களிலும் குளிர் வாட்டி எடுத்தாலும் பகல் நேரங்களில் பங்குனி மாதம் போல வெயில் பட்டையை கிளப்புகிறது.

தமிழகத்தில் இந்த முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட மழைப் பொழிவு அதிகமாக இருந்தது.
நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. காற்றில் ஈரப்பதம் அதிகமாகவே உள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த டிசம்பர் மாத இறுதியில் முடிவுக்கு வந்து விட்டதாக வானிலை மையம் அறிவித்தது.
மழை முடிவுக்கு வந்து விட்டால் காலை வேளையில் ஆங்காங்கே பனிமூட்டம் நிலவுகிறது.
கொடைக்கானலில், நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் வரை நிலவியது. இதனால், மலைப்பகுதி முழுவதும் குளிர் நிலவி வந்தது. இன்று அதிகாலையில் 9 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமைப்புற்களின் மேல் விழுந்த பனித் துளிகள் உறைந்து உறைபனியாக காட்சியளித்தது.
இந்நிலையில், சென்னையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கையும் ஏதுவுமில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications