என்ன பெரிய அமெரிக்கா? தமிழ்நாட்டில் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா? ரஷ்யாவே கிட்ட நெருங்க முடியாது!
சென்னை: தமிழகத்தின் குடும்ப பெண்களிடையே உள்ள தங்க கையிருப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. உலக தங்கக் கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, தமிழக மக்களின் வீடுகளில் மொத்தம் சுமார் 6,720 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவின் தேசிய தங்க கையிருப்புக்கு இணையான அளவிலும், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளின் அரசுத் தங்க கையிருப்பை விட அதிகமாகவும் உள்ளது.
உலக அளவில் தங்கம் என்பது வர்த்தக சின்னமாகக் கருதப்பட்டாலும், இந்தியர்களைப் பொறுத்தமட்டில், தங்கம் அவர்களின் பண்பாட்டு, ஆன்மிக, சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. குறிப்பாக தென்னிந்தியர்கள் தங்கத்தை கவுரவத்தின் அடையாளமாக கருதுகின்றனர்.

திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளில் எவ்வளவு தங்கம் பரிமாறப்படுகிறது என்பதை வைத்துதான் அந்த குடும்பத்தின் செல்வாக்கு கணக்கிடப்படுகிறது. 'பொட்டு தங்கவாமது வாங்கி வைக்கனும்' என்ற எண்ணம் தமிழகத்தின் ஏழை எளிய குடும்பங்களின் கனவாகவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகம் தங்க கையிருப்பு
இப்படியாக இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு சொந்தமான தங்கத்தின் மொத்த எடையில் சுமார் 45 சதவீதம் தென்னிந்திய பெண்களின் வசம் உள்ளது. அதிலும், தமிழகம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக உலக தங்கக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. தமிழகத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது நம்பிக்கை, குடும்பப் பாதுகாப்பு, அடுத்த தலைமுறைக்கான செல்வம் என்பதால் தமிழக பெண்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர் என்கின்றது ஆய்வு.
தமிழக பெண்களிடம் தங்கம்
ஒட்டுமொத்தமாக இந்தியக் குடும்பங்களிடம் 34,600 டன் தங்கம் இருக்கிறது என்றும் அதன் மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$4.94 டிரில்லியன்) என்றும் மோர்கன் ஸ்டேன்லி நிறுவனம் கடந்த அக்டோபரில் வெளியிட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்திய மதிப்பில், 336,928,900,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 34,600 டன் தங்கத்தில் தென்னிந்தியப் பெண்களிடம் 45 விழுக்காடு இருப்பதாகவும் அவர்களில், தமிழகப் பெண்களே முன்னிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உலக அளவில், அமெரிக்க அரசு 8,000 டன் தங்கத்தைக் கையிருப்பு வைத்துள்ளது. ஜெர்மனியிடம் 3,300 டன், இத்தாலி வசம் 2,450 டன், ரஷ்யாவின் வசம் 1,900 டன் ஆகிய நாடுகளெல்லாம், தமிழகக் குடும்பங்களை நெருங்கவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் மதிப்பு
கடந்த இருபது ஆண்டுகளாக, தங்கத்தின் மதிப்பு வருடா வருடம் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. இதுவே தங்கத்தை மற்ற முதலீட்டு வாய்ப்புகளை விட நம்பகமான, நீடித்த சொத்தாக ஆக்குகிறது. பங்கு சந்தை அல்லது நிலம் போன்ற துறைகள் ஏற்றத் தாழ்வுகளைக் காணும் போதும், தங்கத்தின் மதிப்பு நீண்டகாலத்தில் தொடர்ந்து உயர்வதே இதற்குக் காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் மதிப்பு
நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு, தங்கம் என்பது எளிதில் அணுகக்கூடிய, சிறிய அளவில் வாங்கி சேமிக்கக்கூடிய ஒரு உறுதியான முதலீடாகக் கருதுகின்றன. பணத்தட்டுப்பாடு நேரங்களில் அதை எளிதாக விற்பனை செய்யவோ அல்லது அடகு வைக்கவோ முடியும். அதேசமயம், தங்கம் உணர்ச்சி மிகுந்த மதிப்பையும் தமிழகத்தில் தாங்கி நிற்கிறது. திருமணங்கள், விழாக்கள், குழந்தை பிறப்பு போன்ற முக்கிய தருணங்களில் தங்கம் வழங்கும் பழக்கம் தமிழக கலாச்சாரத்தின் ஒரு பங்காகவே உள்ளதால், தமிழகத்தின் தங்க கையிருப்பு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் நகை வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications