தமிழ்நாட்டு பக்கம் வீசிய காற்று.. மின் உற்பத்தியில் நடந்த திடீர் மாற்றம்! இது நல்லா இருக்கே!
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் மின்சார தேவையில் ஏறத்தாழ 30% வரை காற்றாலைகள் நிவர்த்தி செய்திருக்கின்றன. உலக நாடுகள் மாசில்லா மின்சார உற்பத்திக்கு மாறி வரும் நிலையில், தற்போது நடந்திருக்கும் இந்த சம்பவம் தமிழக மின் உற்பத்தி துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களில், ஒவ்வொரு நாளும் சுமார் 100 மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் காற்றாலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்திருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. முதல் நாளில் 101.13 மில்லியன் யூனிட்களும் அடுத்த நாள் 103.90 மில்லியன் யூனிட்களும் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (REPA) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், "காற்றாலை மின்சார உற்பத்தி மே மாதத்தில் 100 மில்லியன் யூனிட்களை கடந்தது இதுவே முதல்முறை. காற்றாலைக்கு தேவையான காற்று வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி, ஜூலையில் உச்சத்தை எட்டும் ஆனால் இந்த முறை, மே மாதமே உச்சத்தை எட்டியிருக்கிறது. முன்கூட்டியே தொடங்கிய பருவமழையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
11,409.68 மில்லியன் யூனிட்கள் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவில் தமிழ்நாட்டில் காற்றாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் அதை விட அதிகமாகத்தான் காற்றலை நமக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து கொடுக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் 13,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்கின்றன. இது மொத்த மின்சார தேவையில் 9.91 சதவிகிதமாகும்.
அதிகபட்சமாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5,838MW அளவுக்கு மின்சாரத்தை காற்றாலை உற்பத்தி செய்திருந்தது. ஒரே மாதத்தில் இந்த அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது கிடையாது. அதேபோல கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 9ம் தேதியன்று அதிகபட்சமாக 120.25 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாறி வரும் சர்வதேச சூழலில் காற்றாலை மின்சாரம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காற்றாலை மின்சார உற்பத்தில் மாசு ஏற்படுவதில்லை, பராமரிப்பு செலவும் குறைவு, விவசாய நிலங்களுக்கு நடுவே வைக்கப்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதே நேரம் ஒரு காற்றாலை நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு ஓராண்டுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும்.
உதாரணத்திற்கு கன்னியாகுமரியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு 2 மெகாவாட் காற்றாலை, சராசரியாக 30-35% திறனில் (capacity factor) இயங்கினால், ஒரு ஆண்டுக்கு சுமார் 4.3 முதல் 6 மில்லியன் kWh மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதை வைத்து கிராமப்புறங்களில் உள்ள 2,000-3,000 வீடுகளுக்கு ஓர் ஆண்டுக்கு தேவையான மின்சாரத்தை விநியோகிக்க முடியும். நகர்புறம் எனில் 500-700 வீடுகளுக்கு ஒரு வருடத்திற்கு மின்சாரத்தை கொடுக்க முடியும்.
ஆனால் காற்றாலைகளின் விலை மிகவும் அதிகம். ஒரு 2 மெகாவாட் காற்றாலையை நிறுவ ரூ.10-12 கோடி வரை ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் 4.2 மெகாவாட் திறன் கொண்ட ஒரு காற்றாலையை நிறுவுவதற்கு ரூ. 88 கோடி செலவானது. எப்படி இருப்பினும் இது நீண்ட கால பலனை கொடுக்கும் என்பதால் இதில் முதலீடு செய்வது சிறந்தது. இனி வரும் காலங்களில் அரசு இதில் முதலீடு செய்ய வேண்டும் என்று சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications