"தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை இங்கு யாரும் தடுக்கவில்லை.." சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது தொடர்பான வழக்கில் என்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய கருத்தை கூறியுள்ளது.. தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியில் தான் பாடப்பட வேண்டும் என்று எந்த விதியிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் மத்திய அரசின் புதிய அறிவிப்பிலும் மாநில பாடலை இறுதியில் தான் பாட வேண்டும் என கூறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, தேசிய கீதத்துடன் நிறைவு செய்யப்படுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், சமீப காலமாக முதலில் வந்தே மாதரம், பிறகு தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற நடைமுறை மாற்றப்பட்டது.

பொதுநல வழக்கு
இதற்கிடையே தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனியா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படுவதும், தேசிய கீதத்துடன் நிறைவு செய்யப்படுவதும் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்ததாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசு
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகிய இரண்டில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் என மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில பாடல் குறித்து அந்த அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எந்த தடையும் இல்லை
அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் தான் பாட வேண்டும் என்று எந்த விதியிலும் கூறப்படவில்லை. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, புதிய அறிவிப்பின்படி தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டதை நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதன் மூலம் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
"தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை" என்று உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


Click it and Unblock the Notifications
