தவெக நிர்வாகிகள் உற்சாகம்.. மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் ரெடியாகுது.. படு வேகம் காட்டும் விஜய்!
சென்னை: ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை மிகப்பெரிய அளவில் நடத்தினார் விஜய். அப்போது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகள் அரசியல் அரங்கில் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பின.

மக்கள் விரோத ஆட்சியை 'திராவிட மாடல்' ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி என தவெக மாநாட்டில் தெரிவித்தார் விஜய். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதைத்தொடர்ந்து 26 தீர்மானங்களையும் தமிழக வெற்றிக் கழகம் நிறைவேற்றி இருந்தது. தொடர்ந்து கட்சி தொடர்பாக அடுத்தடுத்த திட்டங்களை நடிகர் விஜய் மேற்கொண்டு வருவதால், தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் நியமனம் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் வாக்காளர் சேர்க்கை முகாம்களுக்கான பணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர் தவெக நிர்வாகிகள்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் தவெக-வுக்கு மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான பட்டியலையும் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மொத்தம் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரிய மாவட்டங்கள் 3 அல்லது 4 கட்சி மாவட்டங்களாகவும், சிறிய மாவட்டங்கள் 2 கட்சி மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 100 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்திருப்பதாகவும், வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை நியமிப்பது தொடர்பாக, நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களாக நிர்வாகிகளை அழைத்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பட்டியலை தயாரித்து விஜய்யிடம் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க 27 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாநாட்டுக்கு வருபவர்களை அழைத்து வந்து திரும்ப அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் தற்காலிகமாக இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொகுதி பொறுப்பாளர்களாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் சிலருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக வரும் 2026 சட்டசபை தேர்தலில் தவெக களமிறங்க உள்ளதால், மாவட்ட செயலாளர் பதவிகளைப் பெறுவதில் தவெக நிர்வாகிகள் இடையே கடும் போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications