”அந்த உருவத்தை வச்சி பல்டி” அப்பாவுக்கும் மகனுக்கும் இதே வேலையா போச்சு! வெளுத்து வாங்கிய தமிழிசை!
சென்னை: தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை முன்னாள் முதல்வர் உருவக்கேலி செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமமான நிலையில், பெண் அரசியல்வாதிகளை உருவத்தை வைத்து கேலி செய்வது அவர்களை மேலும் பாதிக்கும் எனவும், ஸ்டாலின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
ம.பொ.சிவஞானத்தின் 31-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு முன்னாள் ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக பெண் வேட்பாளர் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக் கேலி செய்ததாக வீடியோக்களை பார்த்தேன். ஸ்டாலின் பேச்சுக்கு என வருத்தம் அல்ல. கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்" என்றார்.
தமிழிசை சௌந்தரராஜன்
பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமமான நிலையில், பெண் அரசியல்வாதிகளை உருவத்தை வைத்து கேலி செய்வது அவர்களை மேலும் பாதிக்கும். அனைத்து பெண்களும் இரும்பு மனம் கொண்டவர்களாக இருக்க முடியாது. திமுக தொண்டர்கள் மட்டுமே இதுபோன்ற உருவக் கேலியில் ஈடுபடுவதாக நினைத்திருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலினின் பேச்சுகளை பார்க்கும் போது, அவர்களிடமிருந்தே இதற்கான வழிகாட்டுதல் செல்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
முக ஸ்டாலின்
பெண்களைப் பற்றி ஆண் தலைவர்கள் எச்சரிக்கையுடனும் மரியாதையுடனும் பேச வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தவெக பங்கேற்பதாக சொல்லியிருக்கிறார்கள். SIR மூலம் போலி மற்றும் தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் தான் தவெக வெற்றி பெற முடிந்தது. SIR இல்லையெனில் கள்ள ஓட்டுகள் மூலம் திமுக தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் தேர்தல் தோல்விக்கு SIR மீது பழி போடாமல், மக்களின் ஆதரவு குறைந்திருப்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையர்
காங்கிரஸ் மற்றும் தவெக தலைவர்கள் தேர்தல் ஆணையர் குறித்து பேசுவதற்கு பதிலாக, காவிரி பிரச்சினை குறித்து பேச வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா விவசாயிகளின் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ சினிமா போல் தான் இருந்தது.
விஜய்
மக்களை எந்த காட்சிகள் மூலம் ஈர்க்க முடியும் என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். டிராக்டர் ஓட்டுவது உள்ளிட்ட நிகழ்வுகள் திட்டமிட்ட காட்சிகளைப் போல இருந்தது. அதே நேரத்தில், முதலமைச்சராக மக்களை நேரடியாக சந்திப்பது ஆரோக்கியமான நடைமுறைதான். ஆனால் ரோடு ஷோக்களுக்காக செலவிடப்படும் நேரத்தை தலைமைச் செயலகத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்த வேண்டும்.
வெற்றி டாஸ்மாக்
இடைத்தேர்தல்களுக்காக செலவிடப்படும் நேரம் மற்றும் பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். தேவையற்ற இடைத்தேர்தல்களை தவிர்க்க வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களுக்கு "வெற்றி" என்ற பெயர் வைக்கப்படுகிறது. தனது தொண்டர் ஒருவர் "வெற்றி டாஸ்மாக்" என பெயர் வைக்கலாம் என்று கூறியதாக தெரிவித்தார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, கூடுதல் சலுகைகள், சீருடை மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இலவச பயணத் திட்டம்
பேருந்துகளில், இலவச பயணத் திட்டம் தேவைதான் என்றாலும், பெண்களுக்கான மாதம் ரூ.2,500 உதவி, மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் என்ன ஆனது? பெண்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
