திமுக Vs தவெக: நீங்க எதிர்லயே இல்ல.. ஆழமா அரசியலை கற்றுக்கொண்டு பேசுங்க - விஜயை விமர்சித்த தமிழிசை
சென்னை: தவெக தலைவர் விஜயின் பேச்சில் தெளிவு இல்லை. அவரது பேச்சு எதுகை மோனைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். தமிழக அரசியலை விஜய் ஆழமாக கற்றுக் கொண்டு தெளிவாக பேச வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜயின் பேச்சு எதுகை மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேச்சு சரியாக இருக்கலாம். ஆனால் அவர் எதிரிலே கூட இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்சியின் அடிப்படையில் மக்கள் பணியாற்றிதான் முன்னால் வந்தார்கள். கொள்கைக்கு காங்கிரஸ், கொள்ளைக்கு இன்னொரு கட்சி என்பதெல்லாம் மிகவும் தவறு. தம்பி விஜய் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

விஜய் பொதுக் கூட்டத்தில் பேசியிருப்பது சினிமாவில் வருவது போல கொஞ்சம் பாட்டு சீன், சண்டை சீன் என்கிற மாதிரி இருமொழிக் கொள்கையைப் பற்றி அவர் பேசியுள்ளார். விஜயின் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும், தெலுங்கில் பேசியும் கூட படம் வெளியாகியுள்ளது. விரிவுப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் விஜய்க்கு பல மொழிகள் தேவைப்படுவது போன்று, விரிவுப்படுத்தப்பட்ட சவால்களில் குழந்தைகளுக்கு இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
படத்துக்கு மட்டும் பல மொழி தேவை. பாடத்திற்கு பல மொழி வேண்டாம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். விஜயின் பின்னால் அஞ்சலை அம்மாள், காமராஜர் படம் போன்றவற்றை பயன்படுத்திவிட்டு பெயர் மட்டும் பெரியாருடையதை வைக்க வேண்டுமா. திமுகவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். அப்போது திமுகவின் பி டீம் நீங்கள் என்று சொல்ல முடியாதா. தவெக தலைவர் விஜயின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
விஜயின் வாழ்க்கை விரிவடைந்ததால் அவருக்கு பனையூர் தேவைப்பட்டது. சாலிகிராமத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார் விஜய். தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைவதால் பரந்தூர் விமான நிலையம் தேவைப்படுகிறது. பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகம், சரக்குகள் அதிகம் எனவே இன்னொரு விமான நிலையம் தேவை. அதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில் தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.
விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பத்து மடங்கு இழப்பீடு கொடுக்கச் சொல்லுங்கள், நிலம் கொடுக்கச் சொல்லுங்கள் ஆனால் எல்லா பணிகளும் நிறைவடைந்த இடத்தை திடீரென வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் சரியாகும். எப்படி இவர்கள் நிர்வாகம் செய்கின்றனர் என்று புரியவில்லை.
மோடியை எதிர்த்துப் பேசும் தைரியம் தனக்கு உள்ளதாக விஜய் கூறுகிறார். அவரது படத்தின் இயக்குநரை, தயாரிப்பாளரை விஜய் எதிர்த்து பேச முடியுமா. ஜனநாயக ரீதியாக எதிர்த்து பேசுவதை மோடி ஆதரிக்கிறார். எனவே விஜய் தெளிவாகவும், அழுத்தமாகவும், ஆழமாகவும் தமிழக அரசியலைக் கற்றுக் கொண்டு விஜய் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications