கூட்டம் வரும்னு வெளியில் வராமல் இருந்தா.. எதற்கு அவர் அரசியல் கட்சித் தலைவர்.. விஜயை விளாசிய தமிழிசை
சென்னை: தமிழ்நாட்டில் போராடும் சாமானிய மக்களை சென்று சந்திக்க முடியவில்லை என்றால், எதற்காக விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்கிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். தூக்கத்தில் இருந்து விஜய் திடீரென எழுந்துவிட்டதாகக் கூறிய தமிழிசை, ஆணவக் கொலைக்கு எதிராகப் பேசாமல் இருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திருவிக நகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி மற்றும் பெண் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த சுமார் 2 ஆயிரம் பேர் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதன் காரணமாக தூய்மைப் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 1 முதல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் 11 நாட்களை கடந்துவிட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு அளிப்பதோடு, தமிழக அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சந்திப்பு நடத்தினார். விஜயின் இந்த செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜயின் அரசியல் குறித்த முன்னாள் ஆளுநரும், பாஜக நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் பேசி இருப்பது கவனத்தைப் பெற்று வருகிறது.
அதில் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், தவெக தலைவர் விஜய் நீண்ட நாட்களாகத் தூக்கத்தில் இருந்தார். ராகுல் காந்தி என்று சொன்னவுடன் எழுந்துவிட்டார் போல.. ஆணவக் கொலை நடந்தது, தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது.. அப்போது முழிக்காதவர் திடீரென எழுந்திருக்கிறார்.. தூய்மைப் பணியாளர்களை சந்தித்தது நல்ல விஷயம் தான்.
ஆனால் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மக்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.. அவர் வரும் போதும் கூட்டம் வந்துவிடுமாம்.. அதனால் விஜய் வீட்டிற்குள்ளேயே இருப்பாராம்.. இவர்கள் அவரை சென்று பார்க்க வேண்டுமாம்.. கூட்டம் வந்துவிடும் என்று நினைத்தால், பின் எதற்கு அரசியல் கட்சித் தலைவராக இருக்கிறார்.. மக்கள் சென்று அவரை சந்திக்க வேண்டுமா?
விஜய் செய்வது என்ன வகையான அரசியல் என்றே தெரியவில்லை.. விஜய் வீட்டில் இருந்து வெளியில் வர மாட்டேன் என்றால், அதற்கு எதற்கு ஒரு அரசியல் கட்சித் தலைவர்? சினிமாவையும் எல்லோரும் வீட்டில் இருந்து பார்க்கலாமா.. அதற்கு மட்டும் கோபம் வருகிறது.. இவரை மக்கள் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டுமா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications