வெளியானது +1 தேர்வு முடிவுகள்.. தமிழகத்தில் 91.17% பேர் தேர்ச்சி.. ரிசல்ட்டை எப்படி பார்க்கலாம்?
சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இன்று +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 91.17% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுடன் +1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்தாண்டு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய +1 பொதுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் 7,534 பள்ளிகளில் இருந்து மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடந்து நிலையில், அதன் பிறகு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் நடைபெற்றன.
+1 தேர்வு முடிவுகள்: லோக்சபா தேர்தல் இருப்பதால் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகலாம் எனச் சொல்லப்பட்டன. இருப்பினும், அதுபோல எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியானது.
கடந்த மே 6ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். அதைத்தொடர்ந்து மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தச் சூழலில் தான் இன்று +1 தேர்வு முடிவுகள் வெளியானது.
எப்படிப் பார்க்கலாம்: இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in தளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த தளங்களுக்குச் சென்று அதில் +1 தேர்வு முடிவுகள் என்பதை க்ளிக் செய்து பிறகு அதில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டால் ரிசல்ட்டை பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல மாணவர்கள் விண்ணப்பத்தின் போது குறிப்பிட்ட மொபைல் எண்களுக்கும் நேரடியாக ரிசல்ட்டை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பவும் பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு மொத்தம் 8.25 லட்சம் பேர் +1 பொதுத்தேர்வை எழுதிய நிலையில், அவர்களில் 7,39,539 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் தேர்ச்சி விகிதம் 91.17%ஆக உள்ளது.
10, +2 தேர்வுகளை போலவே இதிலும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 3.35 லட்சம் பேரும் மாணிகளில் 4.04 லட்சம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.26%ஆக உள்ள நிலையில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.69%ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications