Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷாவை சந்தித்து முக்கிய கோரிக்கையை வைக்கப்போகும் தமிழக எம்.பிக்கள்.. முதல்வர் ஸ்டாலின் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சி எம்.பிக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். சில இடங்களில் மழைநீரை வெளியேற்றவே ஒருவாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பலரது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.

Tamilnadu all party MPs to meet union minister Amit shah

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் 6,000 ரூபாய் நிவாரணத் தொகை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், எஞ்சிய மூன்று மாவட்டங்களில் பாதிப்புகளை சந்தித்த வட்டங்களில் மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்பட்டது.வெள்ள சேதங்களை பார்வையிட நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக பாதிப்புள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு 1000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், டெல்லி சென்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும், ஏற்கெனவே மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய கோரியபடி, தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அண்மையில் திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சமீபத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளம், அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை பிரதமர் மோடி அறிந்தது தான். அந்த வெள்ளத்தால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனை இயற்கை பேரிடராக கருதி , தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கோரியுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளனர். தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடியை உடனே வழங்க வலியுறுத்த உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு: தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழக அரசு மொத்தம் ரூபாய் 37,907.19 கோடி ஏற்கெனவே கோரியுள்ளது. இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 19,692.67 கோடி ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாயும் உள்ளடக்கியதாகும்.

மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட மத்திய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அதோடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகத்துக்கு வந்து, மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை 7-12-2023 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பெருத்த பாதிப்புகளை மத்தியக் குழுவினர் 20-12-2023 அன்று நேரில் பார்வையிட்டனர். மத்திய குழுவினர் இம்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்திடத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து தந்திருந்தது.

இதுமட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் 26-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்று, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி 2-1-2024 அன்று தமிழகத்துக்கு வருகை தந்து, திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார்.

ஆனால், மத்தியக் குழுக்களின் வருகைக்குப் பின்னரும், மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டதற்குப் பிறகும், நிவாரணத் தொகை கோரி தமிழக அரசின் சார்பில் இரண்டு கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், மத்திய அரசிடமிருந்து இதுவரை நிவாரணப் பணிகளுக்கென எந்தவொரு நிவாரணத் தொகையும் பெறப்படவில்லை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டபோது, குறுகிய காலத்திற்குள் மத்திய அரசு நிவாரண நிதியினை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இரண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும், தமிழக அரசு இதுவரை 2,100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்புத் திட்டத்தினையும் தமிழக அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தமிழக அரசு கோரியுள்ள 37,907.19 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+