மாஸ்டர் ஸ்டிரோக்.. எகிப்து வரை நீளும் தமிழ் அகழாய்வு.. களமிறக்கப்படும் பெரிய டீம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழரின் வரலாற்று அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம் என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச அகழாய்விற்காக மிகப்பெரிய குழுவையும் களமிறக்க உள்ளதாகவும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று இதற்காக ஆய்வு செய்ய உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டார். கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு குறித்தும், அங்கு அருங்காட்சியகம் அமைப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
கீழடி நாகரீகம் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், கொற்கை கிமு 8ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதோடு எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தமிழர் வரலாற்றை தேடி ஆய்வு மேற்கொள்ள போவதாகவும் முதல்வர் அறிவித்தார்.

சட்டசபை
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சட்டசபை உரையில், பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல் வணிகம், முத்து குளித்தல் பண்பாடு போன்றவற்றை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் விதமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்தியாவில் எங்குமே இல்லாத அளவிற்கு 5 கோடி ரூபாயை இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது. அகழாய்வு பணிகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்த பட்ஜெட் உதவும்.

நெல்லை
நெல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது பொருநை அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். நவீனமான முறையில் இதன் கட்டுமானம் அமைக்கப்படும். அதோடு தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்களின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள உலகம் முழுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்திய அகழாய்வு ஆராய்ச்சி மையத்தின் அனுமதியை பெற்று சர்வதேச ஆய்வுகள் செய்யப்படலாம்.

சேர நாடு
சேரநாட்டின் தொன்மை, பண்பாட்டினை அறிந்து கொள்ள கேரள தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி செய்யப்படும். தமிழ்நாட்டின் பண்டைய முசிறி நகரம் இப்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் அமைந்துள்ளது. இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் அனுமதி பெற்று இந்த ஆய்வு செய்யப்படும். அவர்களுடன் இணைந்து இந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேங்கி
ஆந்திர மாநிலத்தின் வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். வரலாற்று ரீதியாக தமிழ் பண்பாட்டினை கொண்ட பகுதியான இங்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் ஒடிசா மாநிலத்தின் பாலூர் உள்ளிட்ட வரலாற்று இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அன்றைய ரோம் பேரரசின் ஒரு பகுதியான எகிப்து, ஓமன் நாடுகளில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இங்கு தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன.

வணிகம்
நாம் அவர்களுடன் வணிகம் மேற்கொண்டதற்கான சாட்சியங்கள் இவை. இதனால் அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ராஜேந்திர சோழன் வெற்றித்தடம் பதித்த தெற்காசிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் உரிய அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழர் அடையாளம்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகிற்கு அறிவித்த தமிழர்களின் அடையாளத்தை உலகம் எங்கும் கொண்டு செல்வோம். தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி உலகம் முழுக்க செல்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பின்படி உலகம் முழுக்க எகிப்து, ஓமன் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ்நாட்டின் பெரிய அகழாய்வு டீம் களமிறங்கி விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.












Click it and Unblock the Notifications