லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி
திருச்சி: அதிமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் லால்குடி தொகுதியில் போட்டியிட ஆதவ் அர்ஜுனா மாமியார் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லால்குடி தொகுதியில் அதிமுக நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்களை லீமா ரோஸ் வாரி இரைத்திருந்தார். இதனால் லால்குடி தொகுதி 20 ஆண்டுகளுக்கு பின் அதிமுக வசம் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், தற்போது 127 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 46 பேருக்கு மீண்டும் அதிமுகவில் சீட் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 150 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் 17 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த 17 பெண்களில் லீமா ரோஸ் மார்ட்டின் பெயர் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஏனென்றால் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுகவில் இணைந்தார்.
அதன்பின் உடனடியாக லீமா ரோஸ் மார்ட்டினுக்கு அதிமுகவில் மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடியை மையமாக வைத்து பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வந்தார். முதற்கட்டமாக லால்குடி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு அதிகளவில் பரிசுப் பொருட்களை வாரி இரைத்தார்.
இதன்பின் தொகுதி மக்களுக்கும் பரிசுப் பொருட்கள் செல்ல, லீமா ரோஸ் தேர்தலில் போட்டியிட காய் நகர்த்தி வந்தது தெரிய வந்தது. லீமா ரோஸ் லாட்டரி மார்ட்டின் மனைவி. அதேபோல் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மாமியார். இருப்பினும் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட காய் நகர்த்தி விவாதப் பொருளாக மாறியது.
இந்த நிலையில் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் போட்டியிடுவது அதிமுக வேட்பாளர் பட்டியல் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லால்குடி தொகுதி திமுக வசம் இருக்கிறது. உடையார் சமூக வாக்குகளை கைப்பற்றினால் வெற்றி என்று கணக்கிட்டு லீமா ரோஸ் லால்குடி தொகுதியில் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications