கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம்! தமிழக சட்டசபையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் கடிதம்
சென்னை: தமிழக சட்டசபையின் இந்த நிதியாண்டுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டசபை கூடியது. அப்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த விவகாரம், மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கடிதம் கொடுத்துள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, 13 மற்றும் 14-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையும் இடம் பெற்றது.
அதைத்தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் அதே மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதியும், வேளாண் பட்ஜெட் 20-ந் தேதியும் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டது. 21-ந் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. 22-ந் தேதியுடன், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பொதுவாக, சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முடிந்தவுடன் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், வருகிற 24-ந் தேதி சட்டசபை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். ஆனால், அதற்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் அதற்கு முன்பாக சட்டசபையை கூட்டி துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.
அந்த வகையில், தமிழக சட்டசபை இன்று கூடியது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கும் குவைத் தீவிபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அவர்களது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட இருக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாகவே இருப்பதால், சட்டசபை கூட்டம் காலை, மாலை என இரு வேளைகள் நடைபெறவுள்ளன.
முதல் 2 நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதன்பிறகு, காலை 9.30 மணிக்கே தொடங்கும். ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்துடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணி முதல் 2 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் என இரு வேளை நடைபெறுகிறது. கூட்டத்தின் கடைசி நாளான 29ஆம் தேதி மட்டும் காலை நிகழ்வுடன் கூட்டம் முடிவடைகிறது.
நீர்வளத்துறை துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக, நாளை காலை நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகியவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பதுடன் புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். அன்று மாலை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவை எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் புயலைக்கிளப்பும் என்று கூறப்படுகிறது. நாளை மறுநாள் காலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது.
அது போல் 24 ஆம் தேதி காலை உயர் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, பள்ளி கல்வித்துறை மீதும்,அன்று மாலை நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறைகள் மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.
25 ஆம் தேதி காலை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் , வனத்துறை மீது விவாதம் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications