வெளியானது தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்.. காயத்ரி ரகுராம் பதவி பறிபோனது.. அண்ணாமலை அதிரடி
சென்னை: தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 4 பேர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், பாஜகவினர் சட்டசபைக்கு நுழைவது இதுவே முதல்முறையாகும்.
இதையடுத்து நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சராக்கப்பட்டார்,.

தமிழக பாஜக
இதன் காரணமாக அவர் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பு ஏற்றது முதலே தமிழ்நாடு பாஜகவில் உள்ள நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்று தொடர்ச்சியாகத் தகவல்கள் பரவி வந்தன.

அண்ணாமலை
கடந்த சில வாரங்களாகவே இந்த புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு உள்ள தமிழர்களை அவர் சந்தித்தார். சமீபத்தில் தான் அவர், தமிழகம் திரும்பினார்,

புதிய நிர்வாகிகள் பட்டியல்
இதனிடையே தமிழ்நாடு திரும்பிய கையோடு அண்ணாமலை, தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளார். அதன்படி பாஜக மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக பொதுச் செயலாளர்களாக மொத்தம் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்,

காயத்திரி ரகுராம்
அதேபோல மாநிலப் பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பெப்சி சிவக்குமார் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி மாநிலம் முழுவதும் அனைத்து பொறுப்புகளிலும் அண்ணாமலை அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications