"ஆவரேஜ் ஆக்டர் தான்.. உதயநிதி அளவுக்கு எனக்கு நடிக்க தெரியாது!" பிரஸ் மீட்டில் அண்ணாமலை பளீச்
சென்னை: இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தான் நடித்துள்ள கன்னட திரைப்படமான அரபி குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Recommended Video
மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்திருந்தார். இதற்கான விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சென்னை விமான நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிரதமர் நிகழ்ச்சி
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு தொடங்கி தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பது வரை பல விஷயங்களைப் பேசினார். முதல்வரின் பேச்சுக்கு நேற்றைய தினம் கடும் கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நான் ஆவரேஜ் ஆக்டர்
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் பிரதமரின் தமிழ்நாடு பயணம் குறித்தும் முதல்வரின் பேச்சு குறித்தும் பல முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். இந்த பிரஸ் மீட்டின் இறுதியில் அண்ணாமலை நடித்துள்ள "அரபி" என்ற கன்னட திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, "எனக்கு உதயநிதி ஸ்டாலின் அளவுக்கு நன்றாக எல்லாம் நடிக்கத் தெரியாது. நான் ஒரு ஆவரேஜ் ஆக்டர் தான்.

நீச்சல் வீரர்
கர்நாடகாவில் இருக்கும் நீச்சல் வீரர் விஸ்வாஸ். அவருக்கு இரு கைகளும் இல்லை. இந்தியாவுக்காக 4,5 தங்கப்பதங்களைப் பெற்ற வீரர். அவர் ஒருநாள் என்னைச் சந்தித்து, தான் ஒரு படத்தில் நடிப்பதாகவும் அந்த படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 5 நிமிடங்கள் வரும் காட்சியில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டார். எனக்கு நடிப்பெல்லாம் வராது என்றே முதலில் கூறினேன். இருப்பினும், நான் தான் நடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஒரு ரூபாய் ஊதியம்
இதனால் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, அந்த 5 நிமிட காட்சியில் நடித்துள்ளேன். அந்த ஒரு ரூபாயையும் நான் கடந்த ஆண்டு ஐயப்பன் உண்டியலில் போட்டுவிட்டேன். ஏனென்றால் அது எனக்குக் கிடைத்த ஊதியம் இல்லை. போலீசார் அதிகாரியாக இருந்ததற்குப் பெருமைக்குக் கிடைத்த ஊதியம்.

டப்பிங் கோளாறு
அந்த படத்தில் டப்பிங்கில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று வெளியாக இருந்த டீசர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இந்த ஒரு படத்திற்காக மட்டுமே நடித்துள்ளேன். கைகள் இல்லாத நீச்சல் வீரர் ஒருவருக்கு பயிற்சியாளராக நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

நடிப்பு தொடருமா
மேலும் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அண்ணாமலை, "நான் நடித்தால் அந்த படத்தை நான் மட்டுமே டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டும். எனக்கு நடிப்பின் திறமை குறித்துத் தெரியும். எனக்கு நடிக்கத் தெரியாது. நமக்குத் தெரிந்த வேலையை மட்டும் செய்வோம்" என்றும் அவர் பதில் அளித்தார்.

அரபி திரைப்படம்
கர்நாடகாவைச் சேர்ந்த 32 வயதான நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ். இவர் 10 வயதாக இருக்கும்போது, தந்தை சத்தியநாராயண மூர்த்தியுடன் புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த வீட்டில் சிமென்ட் பூசப்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி மின்வயர்களில் விழுந்துள்ளார். மின்சாரம் இவர் மீது பாய்ந்துள்ளது. இவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை சத்தியநாராயண மூர்த்தி உயிரிழந்துள்ளார். இதில் இரு கைகளை இழந்த பின்னரும் நீச்சல் பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளைப் படைத்து வருகிறார். இவரது வாழ்க்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அரபி என்ற கன்னட படத்தில் தான் அண்ணாமலை நடித்துள்ளார்,












Click it and Unblock the Notifications