"எங்கு சென்றாலும் நல்லா இருக்கட்டும்" காயத்ரி ரகுராமுக்கு அண்ணாமலை வாழ்த்து!
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தன் மீதான விமர்சனங்களை வரவேற்பதாக கூறிய அண்ணாமலை, அவதூறுகளுக்கு பதில் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு பேரை, காவல்துறை தாமதமாக கைது செய்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்மை காலமாக பாஜகவில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யா சிவா மற்றும் காயத்ரி ரகுராம் அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக பாஜக மீது முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஏராளமான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைத்து வருகிறார். தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

அண்ணாமலை பேட்டி
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட திமுகவினர் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன்? தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இரண்டு பேரையும் தாமதமாகவே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் காவல்துறை மீது திமுக அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தார்களா என்று சென்னை ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து
தொடர்ந்து, காயத்ரி ரகுராம் பற்றி கேள்விக்கு, பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன். கட்சியில் இருந்து செல்வோர், புகழ்ந்துவிட்டு தான் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அவர்களின் கருத்தை சொல்கிறார்கள்.

அவதூறுகளுக்கு பதில் இல்லை
பாஜகவை நோக்கி அதிக மகளிர் வந்து கொண்டிருக்கிறார்கள். காயத்ரி ரகுராம் வெளியேறுவதால் எந்த வருத்தமும் கிடையாது. திமுகவை ஆக்ரோஷமாக எதிர்த்து வருகிறவன். என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால் அவதூறு சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

ஈஷா யோகா விவகாரம்
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறது. தமிழக காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஈஷா யோகா மையத்தில் பெண் மாயமாகி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேர்மையான விசாரணையை முத்தரசன் கோரலாம். ஆனாம் சம்மந்தமில்லாமல் பாஜக, ஈஷா யோகா மையம், டெல்லி என்று பேச தேவையில்லை. ஈஷா யோகா மையம் மீது குற்றச்சாட்டு இருந்தால், அதற்கான ஆதாரங்கள் தேவை. அதனை காவல்துறை நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications