கூட்டணி பேச வந்த தவெக! உதாசீனப்படுத்தி துரத்திய எடப்பாடி பழனிசாமி! போட்டுடைத்த சி.வி.சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைக்க தவெக பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் அவர்களை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தி அனுப்பிவிட்டார் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உண்மையை போட்டு உடைத்தார்.

இதுகுறித்து எம்ஆர்சி நகரில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியிருப்பதாவது: இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஒரு படுதோல்வியை அதிமுக சந்தித்துள்ளது.

CV Shanmugam

தோல்வி என்பது இந்த தேர்தலில் மட்டும் இல்லை. 2019ஆம் ஆண்டு முதல் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 சட்டசபை தேர்தல்கள், பல்வேறு இடைத்தேர்தல்கள் உள்ளிட்டவைகளில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. தோல்விக்கு தோல்வி அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து வருகிறது. இது இந்த இயக்கத்திற்கு அச்சுறுத்தலாகியுள்ளது.

இந்த தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யவும், ஆராயவும், அது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கவும் நாங்கள் அழைத்தோம். இதில் பேசி அதிமுகவை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும், கழகத்திற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும், இயக்கத்தை நல்வழிப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை ஒவ்வொரு தோல்வியின் போதும் நாங்கள் வலியுறுத்தினோம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் ஒரு 6 பேர் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசினோம்.

அப்போதே அவரிடம் சொன்னோம். எதிர்காலத்தில் வெற்றி பெற முடியாத நிலை தொடர்ந்தால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.

இதை விவாதிக்கவும் மறுத்து தலைமைக் கழகத்தில் ஒவ்வொரு மாவட்டக் கழகமாக கூட்டி தோல்வியை திசை திருப்பினார். உண்மையாக ஆய்வு கூட்டம் நடத்தியிருந்தால் தோல்விக்கான காரணங்கள் நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்கும்.

அதிமுகவை ஒன்றிணைக்க அவர் மறுத்ததால் வலிமையான கூட்டணியை அவர் வைக்கவில்லை. நாங்கள் வலிமையான கூட்டணியை வைக்க கூறிய போது அதை அவர் உதாசீனப்படுத்தினார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை அவர் மறுக்கலாம், ஆனால் பேச்சுவார்த்தை நடந்தது நிதர்சனம். அந்த கூட்டணியில் தவெகவை உதாசீனப்படுத்தினார். கூட்டணி அமையக் கூடாததற்கு என்னவெல்லாம் பேச முடியுமோ அதையெல்லாம் பேசினார்.

கடைசியாக எதை எதையோ பேசி தவெக நிர்வாகிகளை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தேமுதிகவை அரை பர்சென்ட் கட்சி என்றார் , தனது கட்சியை யார் தவறாக பேசினால் கோபம்தானே வரும். அது போல் தேமுதிகவுக்கு கோபம் வந்து அவர்கள் திமுகவுக்கு போய்விட்டார்கள். அது போல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அப்படித்தான் உதாசீனப்படுத்தி அந்த கூட்டணியும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டார்.

தான் செய்த தவறுகளை எண்ணி மனம் திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை கூட சேர்க்க மறுத்துவிட்டார். நிர்வாகியாக வேண்டாம், அதிமுக தொண்டனாக இருக்கிறேன் என ஓபிஎஸ் எத்தனையோ முறை கேட்டு பார்த்தார், ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த 4 பேரை சேர்க்க மறுத்துவிட்டார்.

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை சேர்த்திருந்தால் இன்று அதிமுக ஆட்சி அமைந்திருக்கும். இல்லாவிட்டாலும் அவர் கண்ணசைவில் ஆட்சி அமைந்திருக்கும். இதை தடுத்தது யார், கெடுத்தது யார், இதையெல்லாம் செய்துவிட்டு இன்று தன்னை நல்லவர் போல் அடையாளம் காட்டிக் கொள்கிறார்.

நாங்கள் துரோகம் செய்துவிட்டதாக சொல்கிறார். அவரது பதவிக்கு ஆபத்து வரும் என்றதும் "கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் திருந்தி வர சந்தர்ப்பம் கொடுப்பதாக" சொல்கிறார், இதைதானே நாங்கள் அன்று வலியுறுத்தினோம். "கட்சி என்றால் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தான்" என்கிறார். அது சரிதான், இவர் தலைமையில் எங்கே வெற்றியை பார்த்தோம். தோல்வியைதானே இந்த இயக்கம் சந்தித்து வருகிறது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+