Gatta Kusthi 2: கட்டா குஸ்தி 2 ரிவ்யூவை தாண்டி ரசிகர்களை பேச வைத்த 5 விஷயங்கள்.. விஷ்ணு விஷால் மீண்டும் வெற்றி பாதையில்!
சென்னை: விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' படம், ரிலீஸானதும் சமூக வலைதளங்களிலும், யூடியூப் விமர்சனங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காலை முதல் பல விமர்சகர்கள் படத்தை பாராட்டி பேசிய நிலையில், தற்போது படம் குறித்து ரசிகர்களும் தங்களது கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, "இது சும்மா ஒரு காமெடி படம் இல்லை... குடும்பத்தோடு நிம்மதியாக ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான எண்டர்டெய்னர்" என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

விஷ்ணு விஷாலின் இயல்பான நடிப்பு
கடந்த சில படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்த விஷ்ணு விஷால், இந்த முறை மீண்டும் குடும்ப ரசிகர்களை குறிவைத்து களமிறங்கியிருக்கிறார். மனைவியின் கனவுக்காக வீட்டை பார்த்துக்கொள்ளும் கணவராக அவர் நடித்திருக்கும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது. வழக்கமான ஹீரோ பில்ட்அப் இல்லாமல், கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்ற பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.
படத்தின் உயிர் காட்சி
படத்தில் அதிகம் பேசப்படுவது விஷ்ணு விஷாலும், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஸாரா சியானாவும் இணைந்து வரும் காட்சிகள்தான். இருவரின் இயல்பான நடிப்பு பல இடங்களில் சிரிக்க வைத்தாலும், சில காட்சிகளில் கண்களையும் கலங்க வைக்கிறது. "படத்தின் உண்மையான ஹீரோ இந்த அப்பா - மகள் உறவுதான்" என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் மாஸ்
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி தனது கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார். குஸ்தி வீராங்கனையாக ஆக்ஷன் காட்சிகளிலும், குடும்ப பிரச்சனைகளில் எமோஷனலாகும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சிரிப்பும், சென்டிமென்டும்
படம் முழுக்க காமெடியை மட்டுமே நம்பாமல், குடும்ப உறவுகள், கணவன் - மனைவி புரிதல், குழந்தைகளின் மனநிலை போன்ற விஷயங்களையும் எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. கருணாஸ், முனிஷ்காந்த், கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரின் காமெடி காட்சிகள் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.
ரசிகர்களின் தீர்ப்பு
சமூக வலைதளங்களில் படம் குறித்து வரும் பெரும்பாலான பதிவுகளிலும், "குடும்பத்தோடு எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்கக்கூடிய படம்", "இரண்டு மணி நேரம் மனசை ரிலாக்ஸ் பண்ணும் நல்ல எண்டர்டெய்னர்", "காமெடி, எமோஷன், குடும்பம் எல்லாம் சரியான கலவையில் இருக்கிறது" என்ற கருத்துகளே அதிகமாக இடம் பெற்று வருகின்றன.
பெரிய ஆக்ஷன், பிரம்மாண்ட காட்சிகளை நம்பாமல், ஒரு எளிய குடும்பக் கதையை சிரிப்போடும் உணர்வோடும் சொல்லியிருப்பதே 'கட்டா குஸ்தி 2' படத்தின் மிகப்பெரிய பலமாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால்தான் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி, குடும்ப ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.











Click it and Unblock the Notifications