தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? திருமாவை ஆதரிக்கும் ஆதவ்.. விட்டுக்கொடுக்காத காங்கிரஸ்!
சென்னை: தவெகவின் ஆதரவு சக்திகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். கூட்டணி ஆட்சியை கூட்டணி கட்சியாக மாற்றுவதே இதனடிப்படை நோக்கம். இந்த கூட்டத்தில், கூட்டணிக்கு பெயர் சூட்டுதல், ஒருங்கிணைப்பாளரை நியமித்தல், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குதல் என்கிற 3 கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டன. ஆனால், கூட்டத்தில் இவைகள் முடிவு செய்யப்படவில்லை. தற்போது, இது குறித்துத்தான் கூட்டணி கட்சிகளிடம் கருத்து வேறுபாடுகள் முளைத்துள்ளன.
கூட்டணிக்கான ஒரு பெயரை விஜய் தேர்வு செய்து வைத்திருப்பதாக தலைவர்களிடம் பேசும் போது சொன்னார். ஆனால், பெயரை சொல்லவில்லை. நீங்களும் யோசியுங்கள். அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என சொல்லிவிட்டார் விஜய். அதேசமயம், விஜய் தேர்வு செய்த பெயர் என்ன? என்பது பற்றி சில தலைவர்கள், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள்.

கூட்டணியின் பெயர் என்ன?
அப்போது, மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி, தமிழக வெற்றிக் கழக சமூக நீதி கூட்டணி, தமிழக சமூக நீதி கூட்டணி, சமூக நீதி வெற்றிக் கூட்டணி என 4 பெயர்கள் தலைவர் முன்பாக இருக்கிறது. இதில் ஒன்றை தேர்வு செய்து அடுத்த மீட்டிங்கில் உங்களிடம் சொல்லுவார் என சொல்லியிருக்கிறார். இதையறிந்தவர்கள், மதசார்பற்ற சமூக நீதி கூட்டணி என்ற பெயர்தான் கூட்டணியின் கோட்பாடுகளுக்கு பொருத்தமாக இருக்கிறது.
இதனை நாம் ஒப்புக்கொள்ளலாம் என்று பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதேசமயம், மதசார்பற்ற சமுக நீதி கொள்கை கூட்டணி என வைக்கலாமே, இதில் செக்யூலர், சோசியல் ஜஸ்டிஸ், பாலிசி ஆகிய மூன்றுமே உள்ளடக்கியதாக இருக்கிறது என ஒரு தலைவர் சொல்லியிருக்கிறார். இதுவும் கூட நல்லாவே இருக்கிறது மற்றவர்கள் ஆமோதித்துள்ளனர்.
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்?
அடுத்த கூட்டத்தில் இந்த பெயர்கள் எல்லாம் விவாதிக்கப்படவிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் யார்? என்கிற ஆலோசனை எழுந்தபோது தான் சில கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. அதாவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளராக வைகோவை தவெக தரப்பில் சீனியர் அமைச்சர்கள் முன்னிறுத்தியுள்ளனர். துரை வைகோவின் மறைமுக முயற்சியில் வைகோ பெயரை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இங்குள்ள மூத்த தலைவர்களில் ஒருவராக வைகோ இருக்கிறார். மத்திய ஆட்சியாளர்களால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வதில் அவருக்கு அனுபவம் இருக்கிறது. அது கூட்டணிக்கு பலமாக இருக்கும் என்றெல்லாம் வைகோவை ஏன் முன்னிறுத்துகிறோம் என்பதற்கான காரணங்களை சொல்லியிருக்கிறார்கள். தவெகவின் ஆதவ் அர்ஜுனா இதனை ஏற்கவில்லை.
திருமாவளவனை முன்னிறுத்தும் ஆதவ் அர்ஜுனா
அவரை பொறுத்தவரை இந்த கூட்டணிக்குள் திருமாவளவனை அழைத்து வந்ததால், திருமாவளவன் தான் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்கிற திட்டம் இருக்கிறது. அதனால், தலைவர்களிடம் அவர் பேசும் போது, சமூக நீதியின் அரசாக தவெக அரசு இருக்கும் என முதல்வர் விஜய் சொல்லி வருகிறார்.
அந்த அடிப்படையில் யோசித்தோமேயானால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு திருமாவளவன் தான் சரியாக இருக்கும். அவரை தேர்வு செய்வதன் மூலம் சமூகநீதிக்கு வலுசேர்க்கும் என பேசியுள்ளார். ஆனால் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோரை ஏற்க காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மனம் இல்லை. காங்கிரஸ் சார்பில் பேசிய மாணிக்கம் தாக்கூர், கூட்டணியில் தவெகவுக்கு அடுத்தப் பெரிய சக்தி காங்கிரஸ் தான்.
காங்கிரஸ் தீவிரம்
நாங்கள் தேசிய கட்சி. மத்தியில் உள்ள பாஜக அரசியலை நாம் எதிர்கொள்ள வேண்டுமானால் ஒருங்கிணைப்பாளர் பதவி காங்கிரஸ்க்கு ஒதுக்குவது தான் ஆரோக்கியமானதாக இருக்கும். அதனால், காங்கிரசுக்குத் தான் ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்பட வேண்டும் என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
அப்போது, காங்கிரசுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் உங்கள் கட்சியில் யாருக்கு அந்த வாய்ப்பை தருவீர்கள்? என சிலர் கேட்க, முதலில் காங்கிரசுக்குத் தான் ஒருங்கிணைப்பாளர் பதவி என ஒருமித்த கருத்துடன் முடிவு செய்யுங்கள். காங்கிரசில் நிறைய தலைவர்கள் இருப்பதால் அது குறித்து ராகுல் காந்தியிடம் கலந்து பேசி பெயரைச் சொல்கிறோம் என மாணிக்கம் தாகூர் சொல்லியிருக்கிறார்.
இப்படி, ஒருங்கிணைப்பாளர் தேர்வு பற்றி தவெக கூட்டணி கட்சி தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்துள்ளன. இதனை முதல்வர் விஜய் எப்படி சரி செய்யப்போகிறார் ? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்கிறார்கள் தவெக தலைவர்கள் தரப்பில். இதனால் தவெக கூட்டணியின் அடுத்தக்கட்ட ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.









Click it and Unblock the Notifications