அப்ப தான் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கோர்ட் உத்தரவு வந்தது.. உடனே கைது.. கொதித்தெழுந்த கனிமொழி
சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரம் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.. தமிழக முதல்வர் விஜய் குறித்து பொதுக்கூட்ட மேடையில் அவதூறாகவும் ஏகவசனத்திலும் பேசியதாக எழுந்த புகாரில், திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திமுக வட்டாரமே கொந்தளித்து போயுள்ளது.. பல மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியும் கடும் கண்டனம் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜூன் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. அதில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அப்போது முதல்வர் விஜய் குறித்தும் பேசியிருந்தார்.. ஆனால் சர்ச்சையாக பேசியதாக தெரிகிறது.. இதனால் எரிச்சலடைந்த தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகப் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை காரணம் காட்டி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தார்கள்.
பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கலும் செய்யப்பட்டது.. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது 2 தரப்பிலும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
திமுக கண்டனம்
அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இது வெறும் அவதூறு வழக்கு மட்டுமே என்பதால் போலீசாரின் வழக்குப் பதிவு சட்டப்படி செல்லாது என்றும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 7 முறை எம்எல்ஏவாக இருந்த ஒருவர் பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும், இந்த வழக்கை பதிவு செய்யாமல் இருந்திருந்தால் 2 தரப்பினரும் மோதல் வரை போயிருக்கும் என்று பதில் வாதம் செய்தனர்.
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "1967ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டை சினிமா துறையை சேர்ந்தவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள், அவர்களை மக்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். ஒரு எம்எல்ஏ சாதாரண குடிமகன் கிடையாது, அவர் ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்தனர்.
கொந்தளிக்கும் திமுக மூத்த தலைவர்கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, கைது செய்யப்பட்ட முதல் மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவார். இந்த கைதானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனிமொழி கண்டனம்
தனது சொந்தத் தொகுதியில் மக்களின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஓர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை, அராஜகமான முறையில் தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அடிபணியாது என்றும் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் திரண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.









Click it and Unblock the Notifications