முஸ்லீம்களுக்கு வாழ்த்தும், நன்றியும்.. சொல்வது பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி.. அசத்தல் திருப்பம்
சென்னை: பிளாஸ்மா வழங்க தயார் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த, இஸ்லாமியர்கள் கூறியுள்ளதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார்.
Recommended Video
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பல டிவி விவாத நிகழ்ச்சிகளில் பாஜக சார்பில் பேசக்கூடியவர். ஆரம்பம் முதலே, டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள், தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாகிவிட்டதாக விமர்சனம் செய்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.
ஆனால், இப்போது இஸ்லாமியர்களின் பெருந்தன்மை மகிழ்ச்சியளிப்பதாக அவர் தனது டுவிட்டுகள் வாயிலாக பாராட்டியுள்ளார்.

பிளாஸ்மா
இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளின் தொகுப்பு: டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு ஊநீர் (பிளாஸ்மா) சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. பிளாஸ்மா தெரபி'அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன? ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.

தானம்
இதன் அடிப்படையில் கோவிட்19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது,அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும். தங்களின் ஊநீரை தானம் செய்ய திருப்பூர், தேனியைச் சேர்ந்த, நோயிலிருந்து மீண்ட இஸ்லாமியர்கள் முன் வந்துள்ளனர்.

நன்றி
தானம் தர தயாராயிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகளும், பாராட்டுக்களும். கொரோனா தொற்று விவகாரத்தில் இஸ்லாமியர்களின் மீது வெறுப்பு அள்ளி வீசப்பட்டதாகவும் அவர்கள் மனம் புண்பட்டிருப்பதாகவும், இந்த 'ஊநீர்' தானத்தின் மூலம் அதை மாற்றியமைக்க முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறியள்ளது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்
தப்லீக் ஜமாஅத் மாநாட்டினை குறித்தோ, அதற்கு சென்றது குறித்தோ விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால், அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று அதிகரித்த நிலையில், அவர்களில் பலரும், அவர்களின் தொடர்புகளும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவில்லை என்பதே விமர்சிக்கப்பட்டது.

தாமதமாம்
தப்லீக் ஜமாஅத் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல என்றும்,ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை யாரும் குற்றம் சொல்லவில்லை என்பதையும் தான் நாம் வலியுறுத்தி கொண்டே இருந்தோம். அவர்களின் தாமதமான நடவடிக்கையால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது, பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை உணர வேண்டும். குணமானவர்கள்,இஸ்லாமிய மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நன்றிக் கடன்
கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், 'ஊநீர்' தானம் செய்ய வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை வாழ்த்த, நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நான் மதவாதியும் அல்ல போலிமதச்சார்பின்மை பேசுபவனும் அல்ல. ஒருவரின் மதநம்பிக்கை வாழ்வை மேம்படுத்தும். அடிப்படைவாதம் வாழ்வை சீரழிக்கும். போலி மதச்சார்பின்மை ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசமாக்கும். இதை அறிந்தவர்கள் அறிவாளிகள். இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications