இன்னும் 10 பிரக்ஞானந்தா வருவாங்க! தமிழக பாடத்திட்டத்தில் வரும் மேஜர் மாற்றம்! பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் செஸ் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. பள்ளிப் பாடத்திட்டத்தில் செஸ் விளையாட்டினை சேர்த்திடும் வகையில், உடற்கல்வி பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அண்மையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டின் 18 வயதேயான குகேஷ் வென்று புதிய வரலாறு படைத்தார். அதேபோல் ஃபிடே உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா முன்னேறி சாதனை படைத்தார். அதேபோல் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி, ஜூனியர் உலக செஸ் சாம்பியன் பிரனவ் வெங்கடேஷ் என்று தமிழக வீரர்கள் சாதனைகள் படைத்து வருகின்றனர்.

அதேபோல் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி தமிழக அரசும் செஸ் வீரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதற்கு கூட தமிழக அரசு ஏற்பாடு செய்த சென்னை செஸ் ஓபன் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கில் கடந்த 4 ஆண்டுகளாக விளையாட்டு மேம்பாட்டிற்கும், வீரர்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாடு நடத்தியது.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய ஆண்டுகள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை 2023 போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியுள்ளது. இன்று உலக அரங்கில் செஸ் விளையாட்டின் தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 2 உலக சாம்பியன்கள், 31 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளோம். இந்த வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பொருட்டு மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவித்து பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் செஸ் விளையாட்டினை சேர்த்திடும் விதமாக, உடற்கல்வி பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக உடற்கல்வி பயிற்சியின் போது மாணவர்கள் இனி செஸ் விளையாட்டிலும் கவனம் செலுத்துவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வரும் காலங்களில் இன்னும் 10 பிரக்ஞானந்தா, 10 குகேஷை தமிழ்நாடு தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications