டெலிவரி தொழிலாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. இருசக்கர மின் வாகனத்துக்கு மானியம்.. பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெலிவரி தொழிலாளர்கள் உள்பட 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ. 20,000 மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவை தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடர்ந்து வந்தார்.

அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால் இது தேர்தலுக்கு முன்பான திமுக அரசின் முழு பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நகர்ப்புற மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். 500 அரசுப் பள்ளிகளில் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்படும். மூன்றாம் பாலினத்தவருக்கும் தவப்புதல்வன் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். பள்ளிகளில் 2,000 கணினி ஆய்வகங்கள் அமைக்க ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 47,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டெலிவரி தொழிலாளர்கள் உள்பட 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ. 20,000 மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ. 20,000 மானியம் வழங்கப்படும். 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். ரூ. 152 கோடியில் அமைக்கப்படும் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 1,308 மாணவர்கள் பயனடைவார்கள். அதேபோல, சென்னையில் ரூ. 100 கோடி மதிப்பில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.
தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications