"பயப்படாதீங்க.. தைரியமா இருங்க".. உக்ரைனில் தமிழக மாணவருக்கு.. வீடியோ காலில் நம்பிக்கை தந்த ஸ்டாலின்
தமிழக மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ காலில் பேசினார்
சென்னை: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.. மேலும் வீடியோ காலில், உக்ரைனில் நிலைமை இப்போது எப்படி உள்ளது என்பதையும் பாதிக்கப்பட்ட மாணவரிடம் கேட்டறிந்தார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்துள்ளது... இந்த சூழலில் அங்கு ஏராளமான இந்தியர்கள் சிக்கி கொண்டுள்ளனர்.
எனவே, அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் தமிழகத்தை சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறைக் கல்வி பயில்வோர் மற்றும் புலம் பெயர்ந்தவர்களும் அங்கு சிக்கி உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயண செலவைத் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். மேலும், அங்கு சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக அணுகுமாறு தமிழக அரசும் அறிவித்திருந்தது.. அதற்கான உதவி எண்களையும் வெளியிட்டிருந்தது..

டெல்லி
மேலும் மாணவர்களை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு, மாவட்ட, மாநில அளவில் மற்றும் டெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.. அத்துடன் உக்ரைன் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளும் படியான செல்போன் நம்பர்களை தமிழக அரசு வெளியிடவும், நேற்று முதல் மாணவர்கள் விடாமல் தொடர்பு கொண்டு வருகின்றனர்..

தமிழர்கள்
இதுவரை கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.. உக்ரைனில் தற்போதுள்ள நிலவரங்களையும், அதனால் ஏற்பட்டுள்ள தங்களது பாதிப்புகளையும் மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்களை பற்றியும் விவரங்களை கூறி வருகின்றனர்.

வீடியோ கால்
தமிழக அரசு வெளியிட்ட நம்பர் மட்டுமல்லாமல், செல்போன் மூலமும், வீடியோ கால் மூலம் மாணவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வருகிறார்கள்.. அதேபோல, மாணவர்களை மீட்க தமிழக அரசு சார்பில் செய்து வரும் நடவடிக்கைகளையும் அவர்களிடம் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்டாலின் நம்பிக்கை
இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இன்று திடீரென முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார்.. மாணவர்களின் நிலைமை பற்றியும், கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்தும் அங்கிருந்தோரிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.. பிறகு வீடியோ கால் மூலம் முதல்வரே நேரடியாக மாணவர்களிடம் பேசினார்.. அவர்கள் தற்போது உக்ரைனில் சந்தித்து வரும் பிரச்சனைகளை கேட்டார்.. விரைவில் அனைவரையும் தமிழகம் அழைத்து வந்துவிடுவோம், தைரியமாக இருங்கள் என்று நம்பிக்கை தந்தார்.












Click it and Unblock the Notifications