சந்தேகத்தோடு திரும்பிய புள்ளி! இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின்! குஷியில் கேரளம்! நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேரளாவில் இருக்கும் சிபிஎம் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அங்கு ஸ்டாலினின் கட் அவுட்டுகளுடன் சிபிஎம் நிர்வாகிகள் முக்கிய நிகழ்ச்சி ஒன்றிற்காக தயாராகி வருகிறார்கள்.. என்ன நிகழ்ச்சி.. என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம்!
நாடு முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தமிழ்நாடு மாநில மாநாடு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கேரளா
இந்த நிலையில் கேரளாவில் இருக்கும் கன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் கட்சிக்கு நட்பாக இருக்கும் பல்வேறு தலைவர்களை தேசிய அளவில் இருந்து அழைக்க அக்கட்சி முடிவு செய்து இருந்தது. இதில் கேரள சிபிஎம் கட்சி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டது.

நேரடி அழைப்பு
கேரளா அரசியலில் முக்கிய புள்ளியும், கேரள அறநிலையத்துறை அமைச்சருமான கே.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து முதல்வரை சந்தித்தார். முதல்வரிடம் நேரடியாக விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தார். ஆனால் இதில் என்ன விஷயம் என்றால் முதல்வர் டெல்லி சென்றுவிட்டு திரும்பிய சமயம் அது. ஏற்கனவே துபாய் பயணத்தால் தமிழ்நாட்டில் சில நிகழ்வுகளுக்கு முதல்வர் செல்ல முடியவில்லை.

தமிழ்நாடு
இதனால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. அதோடு தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. மே 10 வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இப்போது கேரளா சென்று விழா ஒன்றில் கலந்து கொள்வது நன்றாக இருக்காது. இதனால் முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு என்றே கருதப்பட்டது.

கனிமொழி
எனவே முதல்வர் ஸ்டாலின் சார்பாக கனிமொழி அல்லது மூத்த அமைச்சர் ஒருவர் கேரளா செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனால் தமிழ்நாடு வந்த கேரள அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்.. கொஞ்சம் சந்தேகத்தோடுதான் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். அதோடு இதை மாநில சிபிஎம் நிர்வாகிகளுக்கும் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வருவது உறுதி இல்லை.. வந்தால் முன் கூட்டியே தெரிவிப்பார்கள்.. பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

உறுதி
இந்த நிலையில்தான் இன்ப அதிர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் திடீரென கேரளா செல்வதை உறுதி படுத்தி இருக்கிறார். கேரள சிபிஎம் தரப்பிற்கும், முதல்வர் அலுவலகத்திற்கும் இது தொடர்பான தகவல் பறந்துள்ளது. இன்று நடக்கும் சிபிஎம் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வது உறுதியாக உள்ளது. இதையடுத்து கேரளாவில் இன்று ஸ்டாலினை வரவேற்க மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video

ஏற்பாடு
முதல்வரின் வருகையை எதிர்பார்க்காத சிபிஎம் நிர்வாகிகளுக்கு இந்த விஷயம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் - முதல்வர் ஸ்டாலின் இருவரின் புகைப்படங்களை வைத்து கன்னூரில் சில இடங்களில் கட் அவுட்கள் வைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் கேரளாவிற்கு செல்கிறார். அங்கு நிகழ்வை முடித்துவிட்டு இன்று இரவே முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு திரும்ப உள்ளார்.












Click it and Unblock the Notifications