உங்களில் ஒருவன்! எதிர்கட்சிகளை ஒன்றாக அணி திரட்டும் ஸ்டாலின்..நூல் வெளியீட்டு விழாவில் பெரிய பிளான்
சென்னை: தனது சுயசரிதையான "உங்களில் ஒருவன்" புத்தக வெளியீட்டு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர்களையும், பாஜக அல்லாத மாநில முதல்வர்களையும் அழைக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
சென்னையில் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டு இருந்த புத்தக கண்காட்சி ஒருவழியாக தொடங்கி உள்ளது. பபாசி நடத்தும்' 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த முறை புத்தக கண்காட்சி நடக்கிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்ளிட்டோர் நேற்று நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் சுயசரிதை
இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட போவதாக அறிவித்தார். இன்னும் 2 வாரங்களில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த புத்தகத்திற்கு "உங்களில் ஒருவன்" என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இதில் ஸ்டாலினின் அரசியல் பயணம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும்.

திமுக வரலாறு
திமுக வரலாறு, முதல்வர் ஸ்டாலினின் பிறப்பு, அரசியலில் நுழைந்தது, மிசா கைது, இந்தி எதிர்ப்பு போராட்டம், அண்ணா வரலாறு, பெரியாரின் கருத்துக்கள் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த புத்தகம் முதல் பாகம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அரசியல் மேடையாக பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

உங்களில் ஒருவன்
அதாவது உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர்களை அழைக்க போவதாக தகவல்கள் வருகின்றன. 'உங்களில் ஒருவன்' நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பிரன்ஸ் தலைவர் எம்பி ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது..

ஒரே மேடை
அதேபோல் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் ஆகியோரும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எதிர்கட்சிகளை ஒரு மேடையில் திரட்டும் நிகழ்வாக இந்த புத்தக வெளியீட்டு விழா அமையும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட முயன்று வருகிறார். அதேபோல் தெலுங்கானா முதல்வர் கேசி ஆர்எதிர்கட்சிகளை பாஜகவிற்கு கீழ் ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயன்று வருகிறார்.

தெலுங்கானா
அதற்கு முன்னோட்டமாக ஸ்டாலினின் இந்த புத்தக வெளியீட்டு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளை ஒரே மேடையில் திரட்டி அவர்களையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு படியாக இதை திமுக செய்யும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி இந்த புத்தகத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் இடையே உள்ள மனஸ்தாபத்தை போக்கவும் இந்த சந்திப்பு உதவும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications