“சமீபத்தில் கூட..” மனோ பாலா மறைவால் ஸ்டாலின் ஷாக்! “புகைப்பட கண்காட்சியை பாராட்டினாரே” - இரங்கல்
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோபாலா மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் கூட தனது புகைப்படக் கண்காட்சியை பார்த்து மனோபாலா பாராட்டியதை அவர் நினைவுகூர்ந்து உள்ளார்.
பிரபல தமிழ் சினிமா நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதிலும் பல்வேறு பிரபலங்களிடம் பேட்டி எடுத்து வெளியிட்டு வந்தார். இவரது நகைச்சுவை நடிப்பு அனைத்து வயது மக்களையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டது.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மனோபாலா இன்று காலமானார் என்று வெளியான செய்தி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோ பாலாவுக்கு ஜனவரி மாதம் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறிது ஓய்வுக்கு பின்னர் மீண்டும் சினிமா, யூடியூப் சேனல் என சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிய மனோ பாலாவுக்கு திடீரென கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பிய நிலையில் இன்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், "திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. திரு. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
மனோ பாலாவின் மரணத்துக்கு திரைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்ப்ட்டு இருக்கிறது. நாளை காலை 10 மணிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications