'வரும் காலத்தில் மேலும் பல பதக்கங்களை பெற வாழ்த்துகள்..' சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ள சிந்துவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று பேட்மிண்டனில் பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இன்று நடைபெற்ற போட்டியில் சீன வீராங்கனை பிங்ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஏற்கனவே 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பி வி சிந்து படைத்துள்ளார்.

இதையடுத்து பி வி சிந்துவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றுள்ள சிந்துவுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். எதிர்காலத்தில் அவர் மேலும் பல பதக்கங்களை நாட்டிற்காகப் பெற வாழ்த்துகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை எனும் ஆயுதங்களால்,தனக்கான வெற்றிப் பாதையை தானே உருவாக்கி ஒலிம்பிக்கில் தொடர் வெற்றியாக, 2021லும் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பெருமைக்குரிய அன்பு சகோதரி பி வி சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications