வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை மீட்க... தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதியுதவி
சென்னை: வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை மீட்பதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வருவதற்கு மட்டும் தமிழக அரசு இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;

40 நாட்கள்
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே வேலையுமின்றி, உண்ண உணவின்றி உறங்க இடமின்றி, வரப்பே தலையணையாய் - வைக்கோலே பஞ்சு மெத்தையாய் கடந்த 40 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி சீரழிகிறார்கள்.

பணத்திற்கு வழி?
புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய ரயில்வே அமைச்சகம் பயணச்செலவுக்கான பணத்தை அவர்களிடம் கேட்கிறது. மாற்று உடையின்றி தவிக்கும் அவர்கள் பயணச் செலவுக்கான பணத்திற்கு எங்கே செல்வார்கள் என்கிற சிறு உண்மைக்கூட மத்திய அரசுக்குப் புலப்படவில்லை. மாநில அரசோ, இன்னும் அதனின் முடிவை தெரிவிக்கவில்லை.

முதல்வரிடம் வழங்க
எனவே இந்த கையறு நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி அதனுடய அறக்கட்டளையில் இருந்து ரூபாய் ஒரு கோடியை தமிழக முதலமைச்சரிடம் வழங்குவது என முடிவு செய்திருக்கிறது. இத்தொகையை வெளி மாநிலங்களில் இருக்கிற தமிழர்களை தமிழகம் கொண்டு வருவதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

2 மணி நேரத்திற்குள்
புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்புவதற்கான கட்டணத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அறிவித்த இரண்டு மணி நேரத்திற்குள் தமிழக காங்கிரஸ் கமிட்டி துரிதமாக இந்த நிதியுதவி குறித்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.