18 தொகுதியில் கொடி நாட்டியது.. ஸ்டாலினின் நம்பிக்கையை காப்பாற்றிய தமிழக காங்.. சிறப்பான சம்பவம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 16 இடங்களில் அக்கட்சி தற்போது வரை வெற்றிபெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை சந்தித்துள்ளது. இதுவரை வெளியாகி உள்ள முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணி 156 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 78 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திமுக கூட்டணி இதில் 144 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 58 இடங்களில் வென்றுள்ளது.

திமுக கூட்டணி
இந்த சட்டசபை தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறைவாகவே இடம் ஒதுக்கியது. கூட்டணி கட்சிகளின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லாததால் பெரிய அளவில் திமுக இடம் ஒதுக்கவில்லை. காங்கிரசுக்கு 25, மற்ற விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளுக்கு தலா 6 இடங்களை மற்ற கட்சிகளுக்கு 1-2 இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கியது.

காங்கிரஸ்
முக்கியமாக காங்கிரஸ் கட்சி 40+ தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் 25 இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கியது. இந்த நிலையில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் 16 இடங்களில் காங்கிரசின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் மீதம் உள்ள 2 தொகுதியிலும் காங்கிரசின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

தொகுதிகள்
அறந்தாங்கி, குளச்சல், ஈரோடு கிழக்கு, காரைக்குடி, கிள்ளியூர், மயிலாடுதுறை, நாங்குநேரி, பொன்னேரி, சோளிங்கர், சிவகாசி, ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, ஊட்டி, திருவாடானை, வேளச்சேரி, விளவங்கோடு, விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

பின்னடைவு
காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஊத்தங்கரை, ஓமலூர்,கோவை தெற்கு, மேலூர், கள்ளக்குறிச்சி, திருவில்லிபுத்தூர், உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மட்டுமே கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சிறப்பாகவே செயலாற்றி உள்ளது. இன்னும் சில தொகுதிகளில் காங்கிரஸ் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 2ம் இடத்தில் இருப்பதால் காங்கிரசின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புகளும் உள்ளன.












Click it and Unblock the Notifications