பொறியியல் கல்லூரிகளில் படிக்க எல்லோருக்கும் இடம் கிடைக்கும்..அமைச்சர் பொன்முடி நம்பிக்கை
சென்னை: பொறியியல் படிப்பில் சேர இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் 3வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 13ம் தேதி தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இதுவரை 2 ஆம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று, மாணவர்கள் அதிகளவு தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு அதிக அளவில் கம்யூட்டர் சயின்ஸ், ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பாடங்களை மாணவர்கள் அதிக அளவில் தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பொன்முடி பேட்டி
இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார். மூன்றாவது கட்ட கலந்தாய்வில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் எனவும் அவர் கூறினார்.

நான்காவது கட்ட கலந்தாய்வு
பொறியியல் படிப்புக்கான 4-வது கட்ட கலந்தாய்வில் 65ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறிய அமைச்சர் பொன்முடி, நான்காவது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் கூறினார்.

அனைவருக்கும் இடம்
இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும் என்று கூறிய அமைச்சர் பொன்முடி, நிறைய பேர் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலின் அவர்களின் விருப்பம் என்றும் கூறினார்.

7 நாட்களுக்குள் கட்டணம்
இந்தாண்டு முதன்முறையாக கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் போது செலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications