ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி.. மருத்துவ செலவை அரசு ஏற்கும்.. இழப்பீடு அறிவித்த முதல்வர்!
சென்னை: வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் மருத்துவ செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்ட செய்தியால் வேதனையடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வேலூரில் அருகே ஓடும் ரயிலில் இருந்து ஆந்திராவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது, மகளிர் பெட்டியில் கர்ப்பிணி பெண் இருந்துள்ளார். ஜோலார்பேட்டையில் ரயில் நிறுத்தப்பட்ட போது, உடனிருந்த அனைவரும் அங்கு இறங்கி சென்றுள்ளனர்.

அப்போது இளைஞர் ஒருவர் மகளிர் பெட்டியில் ஏறி, தனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவருடன் போராடிய கர்ப்பிணி பெண், ரயில் செயினை இழுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அந்த இளைஞர், கர்ப்பிணி பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கையை உடைத்து கீழ் தள்ளிவிட்டுள்ளார்.
இதன்பின் அங்கிருந்தவர்கள் கர்ப்பிணி பெண்ணை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே துறை சார்பாக ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மருத்துவமனை சிகிச்சையில் இருந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயதுடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்தது. இதனால் வயிற்றில் உள்ள சிசுவை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலப் பிரச்சனையால் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கான செலவையும் அரசு ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 மாத கர்ப்பிணி பெண் தனது சொந்த ஊருக்கு பயணித்த போது, கேவி குப்பம் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று தாக்கி, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளான். இதனால் அந்தப் பெண் பலத்த காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு என்ற துயரமான செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு மருத்துவ செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை கூறிக் கொள்கிறேன். அவருக்கு ரூ.3 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications