கிளம்புகிறார் ஆளுநர் ரவி டெல்லிக்கு! குடியரசு தலைவரை திமுக எம்.பி.க்கள் சந்தித்த நிலையில் நாளை பயணம்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பிற்பகல் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ஆளுநர் உரை விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து திமுக எம்பிக்கள் குழு மனு அளித்த நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி டெல்லி பயணிக்கிறார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் திராவிட மாடல் தமிழ்நாடு, பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், சமூகநீதி, சமத்துவம், பல்லுயிர் ஓம்புதல் உள்ளிட்ட வார்த்தைகளையும் மறைந்த மூத்த தலைவர்களான அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களையும் அவர் வாசிக்காமல் விட்டுவிட்டார்.

ஆளுநர் ஆர் என் ரவி
இந்த நிலையில் ஆளுநர் ஆர் என் ரவியின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் அவையை விட்டு ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறினார். உரை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கியது போல் முடியும் போது தேசிய கீதம் இசைக்க வேண்டும். இதுதான் மரபு. ஆனால் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் பாதியில் சென்றுவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆளுநர் ரவி
இந்த நிலையில் ஆளுநர் ரவி விவகாரம் குறித்து குடியரசுதத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை சந்தித்த தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தலைமையிலான திமுக எம்பிக்கள் குழு முதல்வர் ஸ்டாலின் அளித்த மனுவை கொடுத்ததுடன் ஆளுநரின் அவை மீறல்கள் குறித்தும் விவாதித்தனர். பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக முர்மு தெரிவித்ததாக திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

டெல்லி பயணம்
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பிற்பகல் டெல்லி செல்கிறார். இதையடுத்து அவர் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையின் போது என்ன நடந்தது என்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கமளிக்க அவர் டெல்லி செல்லலாம் என தெரிகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என்றும் தெரிகிறது.

ஆளுநர் உரை
அவ்வாறு சந்திக்கும் பட்சத்தில் ஆளுநர் உரையில் என்னென்ன இருந்தது. எதையெல்லாம் அவர் மாற்றி கூறி தமிழக அரசு அதை மாற்றவில்லை, எதற்காக பாதியிலேயே வெளியேறினார் போன்ற விவரங்களை அவர் தெரிவிப்பார் என தெரிகிறது. ஆளுநர் உரை தொடர்பாக விளக்கம் அளித்து ஏற்கெனவே ஆளுநர் மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications