"கிரிமினல் நடவடிக்கை.." கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. தமிழக அரசு பரபர வார்னிங்.. என்ன மேட்டர்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்குக் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
கோயம்பேட்டில் டிராபிக் நெரிசல் அதிகரித்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிச. மாதம் திறந்து வைத்தார். இப்போது பேருந்துகளை அங்கிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சில இடைத்தரகர்கள் ஆம்னி பேருந்துகள் டிக்கெட்களை கூடுதல் விலையில் விற்பதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கடந்த 24.01.2024 அன்று முதல் தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் 77 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு 5 நடைமேடைகளான நடைமேடை எண் : 10,11,12,13 மற்றும் 14 ஆகிய நடைமேடைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயணிகள் சுலபமாகச் செல்லக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர 250 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இம்முனையத்திலேயே இயக்கப்படாத பேருந்து நிறுத்துமிடம் (Idle Parking Bay) அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்: இப்பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் சிறப்பான முறையில் இயக்குவது தொடர்பாகவும் தொடர்ந்து பல்வேறு விதமான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள்/ முன்பதிவு மையங்கள் தவிர, விதிகளுக்குப் புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வரப்பெற்றன.
அதனைத் தொடர்ந்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், நேற்று (27.01.2024) மாலை, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய முதன்மை நிர்வாக அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்தீபன், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திடீர் ஆய்வு: இந்த ஆய்வின்போது அனுமதியற்ற முறையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடமிருந்து டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்களை விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து (27.1.2024) நேற்று இரவு, முதன்மை நிர்வாக அலுவலர்/டிஆர்ஓ ஜெ. பார்த்தீபன் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், "ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரத்தியேக டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் (Online Booking & Ticket Booking Counter) மூலமாகவோ மட்டுமே, டிக்கெட்டுகள் முன்பதிவுகள் செய்யப்படுகிறது, ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மூலமாக டிக்கெட் புத்தகங்கள் வைத்து பேருந்து நிலையங்களிலோ இதுபோன்று முன்பதிவு செய்யப்படுவதில்லை என்றும், அத்தகைய இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்" எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கிரிமினல் நடவடிக்கை: எனவே, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்குச் சட்டவிரோதமாகக் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கையும் மற்றும் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்படுகிறது. மேலும் இது தொடர்பாகப் பயணிகளுக்கு இப்பேருந்து முனையத்தில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications