தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற வேண்டிய பல்வேறு பணிகள் அப்படியே தேங்கின. மேலும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிய பல கோடி நிதியும் திரும்பி அனுப்பப்பட்டன.

மாநில தேர்தல் ஆணையம்
இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து, கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகள் ஆகியவற்றில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கிலும் கூட, தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தவாறே தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்
இன்று மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தன. அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்சிகள் கோரிக்கை
கொரோனா காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த அதிமுக, அதைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. தேர்தல் அறிவிப்பிற்கு முன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் வேக்சின் போடப்பட்டிருக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கூறப்பட்டது. அதேபோல வன்முறை இல்லாமல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.

வாக்குப்பதிவு நேரம்
முன்னதாக, வாக்குப்பதிவு நேரத்தை 1.5 மணி நேரம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. வழக்கமாகக் காலை 9 மணி முதல் 5.30 மணி வரை மட்டுமே தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் எனத் தேர்தல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அக்டோபர் அல்லது. நவம்பர் மாதம் ஊரக தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனக் கடந்த வாரம் அமைச்சர் கே என் நேரு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications