மோடி பேச்சுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் தமிழக மகளிர் காங்கிரஸின் தாலி ஏந்தும் போராட்டம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது தாலி ஏந்தும் போராட்டத்தை அறிவித்தார்.
லோக்சபா தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ஆம் தேதி தமிழகம், புதுவையில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2ஆவது கட்டமாக நாளை 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், நாட்டு மக்களின் சொத்துகளில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் அதிகாரம் என காங்கிரஸ் தெரிவித்தது. ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக நாட்டின் செல்வத்தை மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அப்படியென்றால் நம் தாய்மார்கள். சகோதரிகளின் தாலி கூட மிஞ்சாது என தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதத்தில் பெங்களூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: உங்கள் வசம் உள்ள தங்கம், திருமாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என சொல்லப்படுகிறது.
தேசம் விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகும் நிலையில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அப்போது உங்கள் தங்கத்தை அல்லது தாலியை பறித்தார்களா? இந்த நாட்டிற்காக என் அம்மா தனது தாலியை தியாகம் செய்தவர். அது போல் இந்திய சீன போரின் போது தேசத்துக்காக தனது தங்கத்தை கொடுத்தவர் இந்திரா காந்தி என பிரியங்கா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையது நியமனமான நிலையில் அவர் பொறுப்பேற்றதும் சத்தியமூர்த்தி பவனில் , பிரதமர் மோடிக்கு எதிராக தாலி ஏந்தும் போராட்டத்தை ஹசீனா அறிவித்துள்ளார். அதில் ஏராளமான மகளிர் காங்கிரஸார் கையில் தாலி ஏந்தி போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications