இரு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை- வானிலை மையம்! அப்போ மற்ற இடங்களில் என்ன நிலை
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் முடிவடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த அக். இறுதியில் தமிழ்நாட்டில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தான் நிறைவடைந்தது. பெரியளவில் ஆரம்பத்தில் மழை இல்லை என்றாலும் கூட அதன் பிறகு நல்ல மழை கிடைத்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, மாநிலத்திற்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகளும் கூட நிரம்பியே காட்சி அளிக்கிறது.

எப்படி இருக்கும்
இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் (ஜன.8) நாளையும் (ஜன.9) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள்
இந்த இரண்டு நாட்களில் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதேபோல நாளை மறுநாள் (ஜன.10) தொடங்கி ஜன12 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் பரங்கிப்பேட்டையில் 30 மிமீ மழையும், சிதம்பரத்தில் ஒரு மிமீ மழையும் பெய்துள்ளது. மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை.

பருவமழை எப்படி இருந்தது
முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாட்டில் பருவ மழை எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதில் பருவமழை போது 4 முதல் 5 நேரங்களில் நல்ல மழை பெய்தது. அக்டோபர் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சிறப்பாக இருந்தது. பருவமழை தாமதம் தொடங்கினாலும், உள்மாவட்டங்களில் நல்ல மழை இருந்தது" என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்தமாக எப்படி
வட தமிழகம் (சென்னை பெல்ட்), வட உள் தமிழகம் (கிருஷ்ணகிரி பெல்ட்) அனைத்திலும் நல்ல பருவமழை இருந்தது.. அதே நேரத்தில் தெற்கு மற்றும் டெல்டா பெல்ட் பகுதிகளில் பெரும்பாலும் எதிர்பார்த்த மழை இல்லை என்று பதிவிட்டிருந்தார். 21 மாவட்டங்களில் நல்ல மழையும் என்றும் 17 மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஒட்டுமொத்த தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை இயல்பை விட 1% அதிகமாகப் பெய்து சாதகமாகவே முடிந்துள்ளது என்று அவர் பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications
