திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் துரைமுருகன். திமுக பொதுச்செயலாளராக உள்ள இவர், நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
தனது இளமைக் காலம் முதலே திமுகவில் தொடர்ந்து பயணித்து வரும் துரைமுருகன், மறைந்த கருணாநிதி காலத்தில் அமைச்சராக இருந்தார். கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் எப்போதும் துரைமுருகன் இருந்து வந்தார்.

துரைமுருகன்
கடந்த டிச. 24இல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த உடன் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
மீண்டும் கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இரு நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த துரைமுருகனுக்கு இன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இப்போது மீண்டும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கவலை
அமைச்சர் துரைமுருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது, திமுக தொண்டர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை
84 வயதான துரைமுருகன் எப்போதும் சட்டசபையில் கலகலப்பாகவும் எதிர்க்கட்சிக்குச் சவால் விடுக்கும் வகையிலும் பேசக் கூடியவர். ஆனால், இப்போது நடந்த முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அவர் முதல் நாள் மட்டுமே கலந்து கொண்டார். அதன் பிறகு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இரு நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் இப்போது அட்மிட் செய்யப்பட்டுள்ளார்

நெகிழ்ச்சி பேச்சு
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், டிஆர் பாலுவுக்கும் கருணாநிதிக்கும் இடையே முன்பு ஒருமுறை நடந்த வாக்குவாதம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தார். இதைக் கேட்ட திமுக எம்பி டிஆர் பாலு மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுத நெகிழ்ச்சி சம்பவமும் நடந்தது












Click it and Unblock the Notifications