"சட்ட ஒழுங்கு பற்றி பேசுகிறாரே எடப்பாடி.. கொடநாடு கொலை வழக்கில் என்ன செய்தார்!" சீறும் துரைமுருகன்
சென்னை: தமிழக சட்ட ஒழுங்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்த நிலையில், இது தொடர்பாக துரைமுருகன் நறுக் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப காலகங்களாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டதாக அதிமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
சமீப ஆண்டுகளாகச் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவைச் சாடி விமர்சித்து இருந்தார்.

துரைமுருகன்
இந்நிலையில் இதற்கு திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் நறுக் பதிலடி கொடுத்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று வேலூரில் சிறப்பாகச் சேவையாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த இந்த விழாவில், அமைச்சர் துரைமுருகன், கதிர்ஆனந்த் எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சொந்த நிதி
இந்த நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், "சிறப்பாகச் சேவை ஆற்றுவோருக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்துவது பாராட்டத்தக்கது. அடுத்தாண்டு முதல் எனது சொந்த நிதியில் இருந்து சிறந்த ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்களுக்கும் விருது அளிப்பேன். எங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது ஊராட்சி தலைவர்கள்தான். இவர்கள் மட்டும் இல்லையென்றால் அரசுத் திட்டங்கள் எதுவும் மக்களிடம் சென்றடையாது.

ஆய்வு செய்ய வேண்டும்
ஊராட்சி தலைவர்களுக்குத் தான் பணத்தைச் செலவு செய்யும் அதிகாரம் இருக்கிறது. சொல்லப்போனால் ஆட்சியை நிலைநிறுத்துவதோ ஊராட்சி தலைவர்களின் கையில் தான் உள்ளது. கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று வளர்ச்சி திட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் கண்டிப்பையும் அன்பையும் ஒரு சேர கலெக்டர் காட்ட வேண்டும். அப்போது தான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்" என்றார்.

அதிமுக ஆட்சி
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "அமைச்சர் மீது மதுரையில் பாஜகவினர் காலணி வீசி தாக்கி உள்ளனர். இது பண்பாடு இல்லாத செயல். அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். பல வங்கிகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன. எந்த விஷத்திலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாகச் சட்டசபையிலேயே நாங்கள் கேள்வி எழுப்பி இருந்தோம்.

கொடநாடு கொலை
அவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கூட கொலைகள் அரங்கேறின. அதையெல்லாம் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. பிரதமரைச் சந்தித்துப் பேசும் போது மேகதாது அணை குறித்துக் கூட முதல்வர் பேச வாய்ப்பு உள்ளது. நீதிமன்றமே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்கிறது. மாற்று இடங்களில் வீடு கட்டிக் கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்று நாங்கள் சொல்வதையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.

கஞ்சா விவகாரம்
மக்களின் கஷ்டம் எங்களுக்குத் தான் தெரியும். ஏனென்றால் நாங்கள் தான் அவர்களுடன் நிற்கிறோம். போதைப்பொருள் பயன்பாடு அதிமுக ஆட்சியில் தான் அதிகரித்தது. இப்போது நாங்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, அதிமுக பதறுகிறது. இதில் விரைவில் கைதுகள் நடக்கும். அப்போது அனைவருக்கும் உண்மை தெரிந்துவிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications