கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..ஸ்பாட்டிற்கு விரையும் அமைச்சர் அன்பில் மகேஷ்! நேரில் ஆய்வு நடத்துகிறார்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை தற்போது தான் ஓய்ந்துள்ள நிலையில், தமிழக அரசு இதில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Recommended Video
கடந்த சில நாட்களாக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் கனியாமூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த மாணவி கடந்த ஜூலை 13இல் பள்ளியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

சந்தேகம்
இருப்பினும், பள்ளி நிர்வாகம் கூறுவதை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மறுபிரேதச பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கடந்த சில நாட்களாகவே மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தினர். கடந்த 6 நாட்களாகவே மாணவியின் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டம்
அங்கு ஏற்கனவே சில மாணவிகள் இதுபோல கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதனால் உடனடியாக பள்ளியை மூடி, தாளாளரைக் கைது செய்ய வேண்டும் என்று நேற்று போராட்டம் நடத்தினர். முதலில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்து பள்ளியைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அங்கு போதிய அளவு போலீசார் இல்லை என்று கூறப்படுகிறது.

வன்முறை
அவர்கள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். இருப்பினும், அதற்குப் போராட்டக்காரர்கள் ஒத்துவரவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. முதலில் போலீசார் வாகனத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், பள்ளியின் சுவரை உடைத்து உள்ளே புகுந்து, அங்கே இருந்த பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்தனர். மேலும், பள்ளி வளாகத்தையும் சூறையாடினர். இதில் போலீசாரில் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

போலீசார்
போராட்டக்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சமயத்தில், போதிய அளவில் போலீசார் இல்லை என்றும் போராட்டம் வன்முறையாக மாற இதுவே காரணம் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையிலும் கூட, வன்முறையாளர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இழப்பீட்டை வசூல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டு
கடந்த 5 நாட்களாகவே போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர்கள்- உயர் அதிகாரிகள் என யாரும் போராட்டக்காரர்களைச் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் உறவினர்களிடம் காட்டாமல் வெறுமன படித்துக் காட்டியதாக உறவினர்கள் கூறுகின்றனர். தமிழக அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு முன்கூட்டியே சென்று இருந்தால், போராட்டம் தீவிரம் அடையாமல் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

அமைச்சர்கள்
இந்நிலையில், போராட்டம் நடைபெற்ற சின்னசேலம் பகுதியில் இருக்கும் நிலைமையை ஆய்வு செய்ய இன்று தமிழக அமைச்சர்கள் அங்கு விரைகின்றனர். கலவரம் காரணமாக நேற்று அப்பகுதியில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே கலவரம் சற்று ஓய்ந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சிக்குச் செல்லும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, கணேசன் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications