பெரிய சவால்.. முக்கியமான துறைகளுக்கு ஸ்டாலின் அடித்த "அப்பாயிண்ட்மெண்ட்".. இவங்க 4 பேர் முக்கியம்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற போகும் அமைச்சர்களுக்கான பட்டியல் இன்று வெளியானது. இதில் 4 முக்கியமான அமைச்சர்களின் தேர்வு அதிக கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் 20000 ஐ தாண்ட தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 23,310 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.
12,72,602 பேர் தமிழகத்தில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 14,779 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இப்படிப்பட்ட நேரத்தில் புதிதாக தமிழகத்தில் பொறுப்பேற்கும் அரசுக்கு கொரோனா பெரிய சவாலாக வந்து நிற்கிறது.

சவால்
கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும், மக்களுக்கு வேக்சின் கொடுக்க வேண்டும், சரிவில் இருக்கும் தமிழக நிதி நிலையை சரி செய்ய வேண்டும், பொருளாதார சரிவை சரி செய்து தொழில்துறை உற்பத்தியை பெருக்க வேண்டும். இதனால் இந்த துறைகளுக்கு திமுக யாரை அமைச்சர்களாக நியமிக்க போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஸ்டாலின்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நிதித்துறை, தொழில்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய 4 துறைகள் அதிக கவனம் பெற்றது. கொரோனா காரணமாக இந்த 4 துறைகளின் அமைச்சர்கள் அதிக கவனம் பெற்றனர். திமுக சார்பாக முக்கியமான இந்த 4 துறைகளை கவனிக்க போவது யார் என்று கேள்விகள் எழுந்து வந்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது!

யார்
அதன்படி தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தொழில்துறைக்கு தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு மா. சுப்பிரமணியன், நிதித்துறைக்கு பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் இந்த தேர்வுதான் தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஏன்
4 முக்கியமான துறைக்கும் நல்ல அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த நபர்களை ஸ்டாலின் நியமித்துள்ளார். அதிலும் நிதித்துறைக்கு பிடிஆர் நியமிக்கப்பட்டதெல்லாம் மாஸ்டர்ஸ்டிரோக் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில் அதிகம் படித்த, நல்ல நிர்வாக திறமை கொண்ட பிடிஆர் நிதித்துறையை கையில் எடுப்பது கண்டிப்பாக சிறப்பான முடிவாக பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு மா. சுப்பிரமணியன் வருவது அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. முன்னாள் சென்னை மேயரான இவர் நல்ல நிர்வாக திறமை கொண்டவர். இதன் காரணமாக தற்போது கொரோனாவை எதிர்கொள்ளும் கடுமையான டாஸ்க் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்துதல், மக்களுக்கு வேக்சினை கொண்டு செல்லுதல் என்று இரண்டு பெரிய டாஸ்க் இவருக்கு உள்ளது. இவரின் தேர்வு சரியானது என்று அரசியல் வல்லுநர்கள் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

டாஸ்க்
அதேபோல் அதிகம் நலிவடைந்து இருக்கும் தொழில்துறை அனுபவம் வாய்ந்த தங்கம் தென்னரசு அமைச்சராகிறார். லாக்டவுனுக்கு பின் தொழில்துறை மீட்டு கொண்டு வரும் மிகப்பெரிய பொறுப்பு இவர் கையில் உள்ளது. பெரிய அனுபவம் கொண்டவர் என்பதால் கண்டிப்பாக இந்த பொறுப்பை இவர் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

கல்வி
இவர் மீது இருக்கும் நம்பிக்கையில்தான் கல்வித்துறைக்கு பதிலாக இந்த முறை தொழில்துறையை ஸ்டாலின் கொடுத்துள்ளார். அதோடு பேரிடர் காலம் என்பதால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் இந்த முறை முக்கியத்துவம் பெறுகிறார். கொரோனா காலம் என்பதால் மற்ற துறைகளோடு இவர் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கொரோனா பெருந்தொற்று போன்ற பேரிடருக்கு எதிராக இவரின் செயல்பாடு அதிகம் கவனிக்கப்படும்.












Click it and Unblock the Notifications