விரைவில் வருகிறது "தமிழ்நாடு பேமெண்ட் வங்கி".. திட்டங்களை எளிதாக கொண்டு செல்ல பிளான்- பிடிஆர்
சென்னை: தமிழ்நாடு பேமெண்ட் வங்கி விரைவில் அரசு மூலம் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று தமிழ்நாடு பேமெண்ட் வங்கி. அரசு கருவூலங்களை விரிவுபடுத்தும் திட்டத்திலும், மக்கள் நேரடியாக பயன் அடையும் வகையில் இந்த பேமண்ட் வங்கி உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பேமெண்ட் வங்கி குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பேட்டி அளித்துள்ளார்.

பயிர்கடன்
அவர் அளித்துள்ள பேட்டியில், பயிர்கடன் தள்ளுபடிகளில் நிறைய பல குளறுபடிகள் நடந்து உள்ளது. இதன் மீதான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். பயிர்க்கடனில் மட்டுமின்றி நகைக்கடனிலும் மோசடி நடந்து உள்ளது. சில இடங்களில் எந்த நகையும் அடகு வைக்காமல் நடைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த கடன்கள் வழங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது.

கண்டுபிடிப்பு
இதை சரி செய்ய புதிய அணுகுமுறையை கையாள இருக்கிறோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் புதிய அணுகுமுறை மூலம் தீர்வு காணப்படும். இறந்தவர்கள் பெயரில் முதியோர் ஓய்வூதியம் வழங்கிக்கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதை பற்றி விசாரித்து வருகிறோம். பல இடங்களில் பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை சென்று சேரவில்லை.

விசாரணை
ஆன்லைனில் முறையாக ஆவணங்கள் பதிவேற்றப்படவில்லை. இதுதான் முறைகேட்டிற்கு முக்கிய காரணம். ஆன்லைனில் தற்போது ஆவணங்களை பதிவேற்றி வருகிறோம். இதன் மூலம் கடன் தள்ளுபடி, கடன் வழங்குதலில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும்.

பேமண்ட் வங்கி
தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் 'தமிழ்நாடு பேமெண்ட் வங்கி' உருவாக்கப்படும். பயனாளிகளுக்கு திட்டங்களை கொண்டு செல்ல 'தமிழ்நாடு பேமெண்ட் வங்கி' உருவாக்கப்படும். அரசு கருவூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கருவூலங்கள் இதன் மூலம் விரிவுபடுத்தப்பட்டு. அவர்கள் பணம் செலுத்தும் வங்கியாக இந்த வங்கி செயல்படும். அதற்கான அனுமதி விரைவில் பெற்றுத்தரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications