கடந்த இரண்டு வருடங்களாக வராத பணம் வரப்போகுது.. பெண்களே ரெடியா..தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி விரைவில் வழங்கப்பட போகிறது, லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெற போகிறார்கள், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, இதுபற்றி பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் நல்ல தகவலை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக 14 ஆயிரம் ரொக்கம், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தவணை முறைகளில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கர்ப்பிணிகளின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் குற்றஞ்சாட்டினார்.
அண்ணாமலை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது என்றும், அந்த நிதி கர்ப்பிணிகளுக்கு சென்று சேரவில்லை எனில் அந்த நிதி எங்கே செல்கிறது? " என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில் "மத்திய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகளால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0' என்ற இணையதளத்துக்கு, தமிழக அரசின் பிக்மி 2.0' இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இதனால் தான் மகப்பேறு நிதியுதவியை விடுவிக்க முடியாமல் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.மகப்பேறு நிதியுதவியை விடுவிப்பதற்கு, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனையும் நடத்தி உள்ளார்கள். 3 நாட்களாக அவர்கள் அங்கு முகாமிட்டு.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில் "துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலமையம் ஆகியவற்றை இணைத்து, அதன் மூலமாகப் பயனாளிகள் பட்டியல் உறுதி செய்ய உள்ளோம். மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, மகப்பேறு நிதியுதவி விடுவிக்கப்படும். மத்திய அரசு அதிகாரிகளும் இதற்கு செவி சாய்த்துள்ளார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications