வக்பு சொத்துக்களை மீட்டெடுப்பதில் சமரசமே கிடையாது! பின்வாங்கமாட்டேன்! அப்துல் ரஹ்மான் திட்டவட்டம்!
சென்னை: வக்பு சொத்துக்களை மீட்டெடுப்பதில் சமரசமே கிடையாது என்றும் அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன் எனவும் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வக்பு சொத்துக்களை ஆக்கிரமித்து பிழைப்பு நடத்தி வருவோர் தான் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் இதற்காக பின்வாங்க மாட்டேன் எனவும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
''தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கக்கூடிய மஸ்ஜித் மற்றும் தர்காக்கள் சார்ந்த சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட சூழல்களைத் தெரிந்துகொண்டு, தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அவற்றை மீட்டெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது. வக்பு சொத்துகளை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, வெளியேறச் சொன்னால் வெளியேறாமல் பிடிவாதமாக முரண்டு பிடித்துக் கொண்டு, தொடர்ந்து அங்கேயே சட்டவிரோதமாக இருந்து கொண்டு, வக்பு வாரியத்தின் மீதே திலாவர் அலி என்பவர் குற்றத்தையும் சுமத்திக் கொண்டிருக்கிறார்.''

எந்தத் தொடர்பும் இல்லை
''2000 கோடி அளவுக்கான ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்ட புகார் என்பது நான் வக்பு வாரியத் தலைவராகப் பொறுப்பு எடுப்பதற்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்காகப் பதியப்பட்ட ஒன்று. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வெளியிட்ட உத்தரவு தான் நான் வாரிய தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு வந்தது. அதன் மூலமாக அரசு ரீதியான விசாரணை முறையாக செய்யப்பட்டு, அதில் தொடர்புடையவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்து இருக்கிறார்கள். அந்தப் புகாருக்கும், நான் வக்பு வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள காலச்சூழலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.''

வாரந்தோறும் திங்கட்கிழமை
''என்னுடைய அறையில் வக்பு வாரியம் தொடர்பான தேவைகளுக்காக யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்ற வசதியை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன். வக்பு வாரிய தலைவரைப் பார்ப்பதற்கு முற்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும் என்ற நிலையை எல்லாம் வைக்காமல், தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும், யார் வேண்டுமானாலும் வாரந்தோறும் திங்கட்கிழமை முழு நாளும் இங்கு வந்து, வக்பு தொடர்பான குறைபாடுகளை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை வக்பு வாரிய தலைவரை நேரடியாகச் சந்தித்து சொல்லலாம் என்கிற வசதியை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.''

எனக்கு எதிராக இடையூறு
''வக்பு வாரிய தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை அவற்றின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால் ஆத்திரம் கொண்டு, எனக்கு எதிராக ஏதாவது இடையூறு செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, எவ்வித முகாந்திரமோ - ஆதாரமுமோ இன்றி, இது போன்ற குற்றச்சாட்டுகளையும், புகார்களையும், வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.''












Click it and Unblock the Notifications