நான் ராஜினாமா பண்றேன்.. நீங்க சட்டசபைக்கு வரணும்! தமிமுன் அன்சாரி சொன்னதுமே ஸ்டாலின் சொன்ன வார்த்தை
சென்னை: நீங்க சட்டசபைக்கு வரனும்.. நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியில் கூட ராஜினாமா செய்கிறேன் என ஸ்டாலினிடம் தெரிவித்தேன். ஆனால் அவரோ, 'அப்படியெல்லாம் பேசக்கூடாது' என கூறிவிட்டதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றபோது இவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 இடங்களில் தவெக வெற்றி பெற்றது. பெரம்பூரில் விஜய், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, எழும்பூரில் ராஜ் மோகன் என மொத்தமாக சென்னையில் தவெக ஆதிக்கம் செலுத்தியது.

ஸ்டாலின் தோல்வி
ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் விஜய்யின் தவெக வெற்றி பெற்றது. தவெக வேட்பாளர் வி எஸ் பாபு கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலினை வீழ்த்தினார். சென்னையில் துறைமுகம் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதி ஆகிய இரண்டை தவிர்த்து மற்ற அனைத்திலும் தவெகவே வெற்றி பெற்றது. அதிமுக இங்கு ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார். இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார்.
அப்படி பேசக்கூடாது என ஸ்டாலின் சொன்னார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி கூறியதாவது:- எனக்கு வாக்களித்த மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அப்போது நீங்கள் மீண்டும் சட்டப் பேரவைக்கு வர வேண்டும் என கூறினேன்.
இதற்காக நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியில் கூட ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தேன். ஆனால் அவரோ, 'அப்படியெல்லாம் பேசக்கூடாது' என கூறிவிட்டார்" என்று கூறினார். முன்னதாக அவர் கூறியதாவது:- "சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக உதய_சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு வெற்றியை தந்த வாக்காளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 25 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகமும், அதன் கூட்டணியும் இத்தொகுதியை வெல்ல வேண்டும் என தொடர்ந்து முனைப்பு காட்டி வந்திருந்த நிலையில், இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளோம் என்பது பெரும் மன நிறைவைத் தருகிறது.
வெளியூர்க்காரர் என்றார்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொகுதி தேர்தல் பணி குழு நுட்பமான வியூகங்களை வகுத்தது. பிரத்யோகமாக எமது மஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியும் களம் இறங்கியது. எல்லோரின்; எல்லாம் சேர்ந்த கூட்டு உழைப்பினால் ; தொகுதி மக்களிடம் அன்பை முதலில் வென்றெடுத்தோம். உரையாடல்கள், நேர்காணல்கள், திண்ணை பரப்புரைகள், தனிநபர் சந்திப்புகள், குழு உரையாடல்கள், இலக்கிய ஒன்று கூடல்கள் என நடைபெற்ற சந்திப்புகள் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
ஒரு கோயில் நகரத்தில் போட்டியிடுவதா? என்றார்கள். தீட்சிதர்கள் உங்களை ஏற்க மாட்டார்கள் என்றார்கள். வெளியூர்க்காரர் என்றார்கள். இவற்றையெல்லாம் கண்டு அறமும், அரசியல் செயல் திட்டங்களும், நேர்மையான வியூகங்களும் வைத்திருப்பவர்கள் பதற்றப்பட மாட்டார்கள்.
எங்களின் அழகிய செயல்பாடுகளால் அவற்றுக்கு பதில் அளித்தோம். அரசியலையும் கடந்து மக்களிடம் எமது நிலைபாடுகளை ஒளிவு, மறைவின்றி விளக்கினோம். இத்தொகுதியில் மாணவர்களையும், இளைஞர்களையும, சிறார், சிறுமிகளையும் எங்களின் நம்பிக்கை வளையத்திற்குள் கொண்டு வந்தோம்.
எதிர்க்கட்சியாக செயல்பட இருக்கிறோம்
நகரத்தில் தீட்சிதர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நெருங்கி வந்தார்கள். கிராமப்புறங்களில் கட்சி சாராத பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாக கருத்து பரிமாற்றங்களை செய்தார்கள். அலை சூழ்ந்த அரசியல் களத்தில் இத்தொகுதியில் நாங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதற்கு இதுவெல்லாம் முக்கிய காரணங்கள் என பலரும் கூறுகிறார்கள்.
25 ஆண்டு காலம் ஒரு கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதியை, 25 நாட்களில் மாற்றி இருக்கிறீர்கள் என பாராட்டுகிறார்கள். இறைவனின் அருளால்; மக்களின் ஆதரவால் இதுவெல்லாம் நிகழ்ந்திருப்பதாக உறுதியாக நம்புகிறோம். இந்நிலையில் நாங்கள் ஆளும் கட்சி கூட்டணியாக இருக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறோம். அதே நேரத்தில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட இருக்கிறோம்.
தொகுதி மக்களுக்காக மட்டும் இன்றி, முழு தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் சமரசம் இன்றி செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம். தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளிலும் உள்ளோம். முதல் கட்டமாக குடிநீர் பிரச்சினைகளுக்கும், சாலைகளை அமைத்துக் கொடுப்பதற்கும், பட்டாக்களை பெற்று கொடுப்பதற்கும்,முன்னுரிமை கொடுப்பது என்று தீர்மானித்து உள்ளோம்.
5747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இத்தருணத்தில் எங்களது வெற்றிக்காக உழைத்த மாண்புமிகு அமைச்சர் திரு.M.R.K.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில்; திமுகவின் மாவட்ட பொருளாளர் திரு.சேர்மன் கதிரவன் அவர்களின் வழிகாட்டலில்; சிறப்பாக உழைத்த திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும், நுட்பமான களப்பணிகளை கையாண்ட மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கும் எங்களை நம்பி வாக்களித்த அனைவருக்கும், எமது பணிகளில் பங்கேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும், மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடுமையான மும்முனைப் போட்டியில்; பதிவான 1 லட்சத்து 96ஆயிரத்து 586 வாக்குகளில்; 69 ஆயிரத்து 739 வாக்குகளை பெற்று; 5747 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறோம். இத்தருணத்தில் இது தொகுதியில் மாபெரும் சாதனையாக வர்ணிக்கப்படுகிறது. தொகுதிக்கு வெளியே எமது அபிமானிகள், ஆதரவாளர்கள், நல் உள்ளங்கள், திராவிட - தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், பல்துறை அறிவாளிகள் என பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு உங்களின் வெற்றி செய்திக்காக இரவுவரை காத்திருந்தோம் என்றும், உங்களின் வெற்றியை எங்களின் தனிப்பட்ட வெற்றியாக கருதினோம் என்றும் கூறி மகிழ்கிறார்கள்" என்றார்.















Click it and Unblock the Notifications