டச் பண்ணாதீங்க.. இந்த மாசம் கரண்ட் பில் கட்டியாச்சா? மெசேஜ் வந்ததா? தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் மிக முக்கியமான அலர்ட் ஒன்றினை பொதுமக்களுக்கு விடுத்திருக்கிறது.. இது தொடர்பாக மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர், தலைமைப் பொறியாளர் எச்சரிக்கை ஒன்றையும் அறிவித்திருக்கிறார்.
மின்சார கட்டணம் என்ற பெயரில் குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது..

அதாவது, "இன்றிரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.. மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்து, வெறும் ரூ.10 செலுத்தினால் போதும்" என்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புகிறார்களாம் மோசடி பேர்வழிகள்.
மெசேஜ்: இதை உண்மை என்று நம்பிய வாடிக்கையாளர்களும், அவர்கள் அனுப்பிய லிங்க்கை ஓபன் செய்து, ரூ.10 அனுப்பி வைப்பார்கள். ஆனால், உங்களது வங்கி கணக்கின் மொத்த விவரங்களும் திருடப்பட்டு, பணத்தையும் மோசடி நபர்கள் பணத்தை எடுத்துக்கொள்வார்கள்..
எனவே, தப்பி தவறி கூட அவர்கள் சொல்லும் ஆப்பை டவுன்லோடு செய்யக்கூடாது என்றும், அப்படி செய்தால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சிறுக சிறுக அந்த நபர்களுக்கு பணம் சென்று கொண்டே இருக்கும் என்றும் போலீசார் பொதுமக்களை அலர்ட் செய்தவாறே உள்ளனர்.
தமிழக மின்வாரியம்: ஆனாலும், புது புது வழிகளில் மோசடிகள் நடந்தவாறே உள்ளன.. அதிலும், கரண்ட் பில் கட்டுவதில்தான், பெருமளவு மோசடி நடக்கிறதாம்.. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரிலேயே மோசடிகள் அதிகமாக நடக்க துவங்கியிருக்கிறது..
காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர். இதைத்தான், மோசடி கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது.
செயலி லிங்க்: ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்துவோரை குறிவைத்து, அவர்களது வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் மற்றும் செயலிக்கான லிங்க் இணைத்து அனுப்புகிறார்கள்..
மின்சார வாரியத்தின் அலுவல் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் எண்ணைப் போல உள்ள அந்த தகவலில், "அறிவிப்பு - தங்களது மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணி முதல் மின்சார அலுவலகத்தின் மூலம் துண்டிக்கப்படுகிறது. கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் இன்னும் சரி செய்யப்படவில்லை. எனவே, மின்சார வாரியத்தின் இந்த குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, தேவையான விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 மட்டும்" என்று மெசேஜ் அனுப்புகிறார்கள்.
மின்சார அலுவலகம்: அத்துடன், இதன் இணைப்பாக செயலிக்கான லிங்க் ஒன்றையும் இணைத்துள்ளனர். இந்த தகவல் குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் நம்பரை தொடர்பு கொண்டால், யாருமே அழைப்பை ஏற்பதில்லையாம்.
இதுகுறித்துதான் மின்வாரியமே நேரடியாக இதில் தலையிட்டு, பொதுமக்களுக்கு அலர்ட் செய்திருக்கிறது.. இதுகுறித்து மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர், தலைமைப் பொறியாளர் (பொ) மங்களநாதன் சொன்னதாவது:
நம்பாதீங்க: "மின்சார வாரியத்தின் சார்பில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின் நுகர்வோர் யாருக்கும் வாட்ஸ்அப் மூலம் எந்த தகவலும் இதுவரை பகிரப்படவில்லை. ஆன்லைன் மோசடி கும்பல் தங்களின் மோசடிக்கு துணையாக வாரியத்தின் பெயரை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
குறிப்பாக செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தகவல்கள் மட்டுமின்றி பணமும் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே, வாட்ஸ்அப் தகவலை நம்பி மின் நுகர்வோர் யாரும் ஏபிகே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்" என்றார்.












Click it and Unblock the Notifications